முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீது 400 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்...

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீது 400 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.

முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீது 400 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்...
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி.  ஈடுபட்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு அவர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
 
பாலியல் தொல்லை புகார் தொடர்பான விசாரணை நிறைவடைந்த நிலையில், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான சி.பி.சி.ஐ.டி போலீசார், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் 100-க்கும் மேற்பட்டோர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். முன்னாள் சிறப்பு டி.ஜி.பி.யின்  குற்றச்செயலுக்கு துணை போனதாக ஐ.ஜி., டி.ஐ.ஜி. மற்றும் 2 எஸ்.பி.க்கள் மீது குற்றச்சாட்டுகள் இடம் பெற்றுள்ளன. முன்னாள் சிறப்பு டி.ஜி.பி உள்பட 5 காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, தமிழக அரசுக்கு சி.பி.சி.ஐ.டி. பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.