1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்...

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்...

தமிழகத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தாா். அதன்படி, அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்திற்குள் ஒரு லட்சம் மின் இணைப்புகளை முழுமையாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்கு, தேர்தல் முடிந்த பிறகே இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்கட்டமாக 25 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குவதற்கான ஆணையை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்வில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த அதிமுக ஆட்சியில் மின்சார வாரியத்தை 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தள்ளி விட்டுச் சென்றுள்ளதாக குற்றம் சாட்டினார். கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 2 லட்சம் விவசாயிகளுக்கு மட்டுமே இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் தற்போது 4 மாத காலத்திலேயே ஒரு லட்சம் பேருக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட உள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார். திமுக ஆட்சியைப் போன்ற ஒரு அரசை வேறு எந்த மாநிலத்திலும் பார்க்க முடியாது எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.