கிடங்குகளில் முடங்கி பாழடைந்து கிடக்கும் இலவச பொருட்கள்....பொதுமக்கள் வேதனை

செங்கல்பட்டு அருகே மக்களுக்கு செல்ல வேண்டிய மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட இலவச பொருட்கள் கிடங்குகளில் கேட்பாரற்று கிடப்பதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கிடங்குகளில்  முடங்கி பாழடைந்து கிடக்கும் இலவச பொருட்கள்....பொதுமக்கள் வேதனை

கடந்த 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட அதிமுக, தமிழக மக்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே உடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்தார். 

ஜெயலலிதா இருந்தவரை இலவச பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், அவரது மரணத்திற்கு பிறகு முதலமைச்சராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில், இலவச பொருட்களை வழங்குவதில் தாமதம்  ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த நான்காண்டுகளாக  செங்கல்பட்டு பழைய  தாலுகா அலுவலக கட்டித்தில் மக்களுக்கு வழங்க வேண்டிய மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் கேட்பாரற்று கிடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  

இதேபோல் செங்கல்பட்டு நகராட்சியின் கீழ் செயல்படும் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதியிலும் ஏராளமான இலவச பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படாமல் கிடப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.