கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோரின் சொத்துக்கள் முடக்கம்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை

தென் மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட 494 கஞ்சா வழக்குகளில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும் 813 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோரின் சொத்துக்கள் முடக்கம்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை

கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்க தமிழ்நாடு காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கஞ்சா தொழிலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 10 மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மண்டலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 90 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3 மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட 6 வழக்குகளில் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தென் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி காவல்நிலைய வழக்கில் 37 லட்ச ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் மற்றும் 3 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சேடபட்டியில் இரு வழக்குகளில் சுமார் 59 லட்ச ரூபாய் மதிப்புள்ள அசையா  சொத்துக்களும் திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் 1 புள்ளி 8 கோடி மதிப்பிலான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் மயிலாடும்பாறை மற்றும் ஓடைப்பட்டியில் 23 லட்ச ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொடர் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகள் மற்றும் நெருங்கிய உறவினர்களின் சந்தேகத்திற்குரிய வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் மதுரையில் 191, விருதுநகர் 119, திண்டுக்கல் 116, தேனி, 146, ராமநாதபுரம் 56, சிவகங்கை 16, நெல்லை 22, தென்காசி 20, தூத்துக்குடி 36 மற்றும் குமரி மாவட்டத்தில் 91 என மொத்தம் 813 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்ந்தால் சம்பந்தப்பட்டோர் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் என்று தென் மாவட்ட காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.