தவளைகளுக்கு டும் டும் டும்...மழைக்காக கல்யாணம் பண்ணி வச்ச கிராம மக்கள்...!

கோவை அருகே மழை வேண்டி தவளைகளுக்கு கிராம மக்கள் திருமணம் செய்து வைக்கும் நூதன வழிபாடு நடைபெற்றது.

சொப்பா... என்னா வெயிலுப்பா... என தமிழ் நாடு மக்கள் ஒரு புறம் புலம்பிட்டும், மறுபுறம் கொஞ்சமாச்சு அப்பப்போ மழை பெய்யாதா-னு ஏக்கத்தோடும் இருக்காங்க. பொதுவா எல்லாரும் மழை பெய்யணும் னு கடவுளை கும்பிட்டுட்டு அவங்க வேலைய பாக்க போயிருவாங்க. ஆனா, மழை பெய்யணும் னு வேண்டிக்கிட்டு இங்க ஒரு ஊரே சேர்ந்து ரெண்டு தவளைக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க.

தமிழகம் முழுவதும் வெயிலோட தாக்கம் அதிகமா இருக்கிற நிலைமையில, கோவை மக்கள் மழை பெய்ய வேண்டியும் பொதுமக்கள் நலமாக இருக்க வேண்டியும் தவளைகளுக்கு திருமணம் செஞ்சு வச்சிருக்காங்க.

கோவையை சேர்ந்த வேடப்பட்டி ஊர் பொதுமக்கள் 12 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த திருமண நிகழ்ச்சியை நடத்திருக்காங்க. ஒரு ஆண் தவளைக்கு மாப்பிள்ளை போல வேடமணிந்து, குரும்பபாளையம் வீதிகள் வழியாக, மாப்பிள்ளையை மேளதாளம் முழங்க ஊர்வலம் அழைத்துச் சென்றிருக்காங்க. 

அதே மாதிரி குரும்பாளையம் ஊர் கவுண்டர் வீட்டில் பெண் தவளைக்கு சீர்வரிசை பொருட்கள் கொடுத்து பெண் அழைப்பு ஊர்வலம் நடத்திருக்காங்க. இதைஎடுத்து, குரும்பபாளையத்தில் உள்ள விநாயகர் கோவிலில் வச்சு ஊர் பொதுமக்கள் ஆண் பெண் தவளைகளுக்கு திருமணம் செய்து வச்சிருக்காங்க. அப்பொழுது அங்க கூடியிருந்த பொதுமக்கள் எல்லாரும் மங்கள அரிசியை தூவி வாழ்த்தியிருக்காங்க. பின்னர் மீண்டும் கிணற்றில் விடபட்டுள்ளன.

இது குறித்து ஊர் பொதுமக்கள் பேசும் பொழுது, "மழை வேண்டி இந்த விழா நடைபெறுவது வழக்கம். தற்பொழுது மழை பொய்த்து விட்டதால் மழை வேண்டி ஆண் மற்றும் பெண் தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றோம் . இதற்க்காக ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று உணவு சேகரித்து அதை முனியப்பன் கோவிலில் படைத்து மூன்று கன்னிப் பெண்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.
இந்த திருமண நிகழ்ச்சி முடிந்தவுடன் குரும்ப பாளையம் ஊரில் உள்ள மழை நீர் வேண்டி மதுரை வீரன் சாமி கோவிலில் கிடா வெட்டி படையல் வைத்து பூஜை நடைபெறும். நடு இரவு சாலையில் பொதுமக்கள் அமர்ந்து படையல் சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் மழை பெய்யும் என்பது ஐதீகம் இது காலங்காலமாக நடந்து வருகிறது" னு சொல்லியிருக்காங்க.