பெத்தேல் நகர் மக்களுக்கு மாற்று இடம் வழங்க நிதி - தமிழக அரசு

பெத்தேல் நகர் பகுதி மக்களுக்கு மாற்று இடத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுவருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பெத்தேல் நகர் மக்களுக்கு மாற்று இடம் வழங்க நிதி - தமிழக அரசு

சென்னை ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கடந்த  2017ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பெத்தேல் நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் உள்ளிட்ட 100 பேர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு, மறு ஆய்வு செய்யக்கோரிய அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அத்துடன் ஆக்கிரமிப்பு பணிகளை மேற்கொள்ளவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவை, எதிர்த்து பெத்தேல்நகர் பாதுகாப்பு பேரவை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அமர்வு முன்பு  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில்  கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, வணிக கட்டுமானங்களுக்கு  சீல் வைக்கப்பட்டு, மின் இணைப்பு,குடிநீர் இணைப்பு  துண்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

காலி இடங்கள் கையகப்படுத்தப்பட்டுவிட்டதாகவும், பெத்தேல் நகர் பகுதி மக்களுக்கு மாற்று இடம்  வழங்க அரசு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுவருவதாக தெரிவித்தார்.

பெத்தேல் நகர் பாதுகாப்பு பேரவை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு நிலுவையில் உள்ளதாகவும் வழக்கை நான்கு வாரம் ஒத்திவைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த  முதன்மை அமர்வு, இந்த வழக்கில் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை எனக் கூறி வழக்கை ஒரு வாரம் ஒத்திவைத்தனர்.