வீட்டை விட்டு வந்து காதலனை கரம் பிடித்த காதலி காவல்நிலையத்தில் தஞ்சம்… மகளை பிரித்து அனுப்பக் கோரி மண்ணெண்ணெய் ஊற்றி பெற்றோர் போராட்டம்

வேடசந்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த காதல் ஜோடியை பிரித்து அனுப்ப கோரி உறவினர்கள் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

வீட்டை விட்டு வந்து காதலனை கரம் பிடித்த காதலி காவல்நிலையத்தில் தஞ்சம்… மகளை பிரித்து அனுப்பக் கோரி மண்ணெண்ணெய் ஊற்றி பெற்றோர் போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம் பெரிய கோட்டையை சேர்ந்த ராம்குமார், திண்டுக்கலில் உள்ள தனியார் சேமியா கம்பெனி ஒன்றில்  பணிபுரிந்து வந்தார். அப்போது இவருடன் பணிபுரிந்து வந்த வேடச்சந்தூர் கருவார்பட்டியை சேர்ந்த சத்தியப்ரியா உடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் வளர்ந்து காதலாக மாறியுள்ளது.இந்நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு ராம்குமார், சத்தியப்ரியா-வை தொடர்புக் கொண்டு திருமணம் செய்துக் கொள்ளலாம் என கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு சத்யப்ரியா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த  ராம்குமார்..

தம்மை திருமணம் செய்துக்கொள்ள வில்லை என்றால், தற்கொலை செய்துக்கொள்ளப் போவதாக  கூறி மிரட்டியுள்ளார். இதனை நம்பாமல் சத்யப்ரியா இருந்துள்ளார். இதனையடுத்து ராம் குமார் தனது கையில் பிளேடால் கிளித்துக் கொண்டு புகைப்படம் எடுத்து அவரது செல்போன் எண்ணிற்கு அனுப்பியுள்ளார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சத்யப்ரியா, வீட்டை விட்டு வெளியேறி ராம்குமாரை கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டு அவரது உறவினர் வீட்டில் கடந்த 10 நாட்களாக தஞ்சமடைந்துள்ளனர். இதனையடுத்து தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாக காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் சத்யப்ரியாவின் குடும்பத்தினருக்கு தெரியவரவே துணை கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தங்களது மகளை பிரித்து அனுப்புமாறு கூச்சலிட்டனர். சத்யப்ரியா பெற்றோருடன் செல்ல மறுத்ததை அடுத்து உறவினர்கள் ஒருவர் மாத்தி ஒருவராக மண்ணெய்யை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அவர்கள் அனைவரையும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் காப்பாற்றினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

அதன்பின்னர் காவல்துறையினர் சத்யப்ரியாவின் பெற்றோரை அழைத்து தங்களது மகளிடம் பேசிப்பாருங்கள் வந்தால் அழைத்து செல்லுங்கள், இல்லையென்றால் எதுவும் செய்ய முடியாது என்றும், அவர்கள் மேஜர் அதனால் சட்டப்படி திருமணம் செல்லும் என தெரிவித்துள்ளனர்.  பெற்றோர்கள் கண்ணீர் மல்க தங்களுடன் வருமாறு அழைத்துள்ளனர். இதற்கு சற்றுக் கூட இசையாத சத்யப்ரியா காதலனுடன்தான் செல்வேன் என பிடிவாதமாக கூறிவிட்டார். இதனையடுத்து என்ன செய்வதென்று தெரியாமல்  திகைத்த பெண்ணின் பெற்றோர் பல ஆண்டுகள் கண்ணுக்குள் வைத்து பாதுகாத்து வளர்த்து வந்த மகள், தங்களுடன் வர மாட்டேன் என தெரிவித்ததால் கண்ணீருடன் அங்கிருந்த புறப்பட்டு சென்றனர்.