பாமகவிற்கு ஒரு முறையாவது வாய்ப்புக் கொடுங்கள் -அன்புமணி ராமதாஸ்!

பாமகவிற்கு ஒரு முறையாவது வாய்ப்புக் கொடுங்கள் -அன்புமணி ராமதாஸ்!

பாமகவிற்கு ஒரு முறையாவது வாய்ப்புக் கொடுங்கள்  என தமிழக மக்களிடம் கேட்டு வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

1989 ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி  இன்று 35 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் சென்னை தரமணியில்  அக்கட்சியில் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பாமக கொடியை ஏற்றி வைத்து கட்சித் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். மேலும்  பள்ளி மாணவர்களுக்கு நோட்டுகள் , எழுது பொருட்கள் உள்ளிட்டவற்றை  வழங்கிய பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், கடந்த 55 ஆண்டுகளாக திமுக , அதிமுக என இரண்டு  கட்சிகளின் ஆட்சியில் தமிழகத்திற்கு உண்மையான வளர்ச்சி கிடைக்கவில்லை . ஒரு கிலோ தக்காளி இன்று 140 ரூபாய், 2 மாதம் முன்பு ஒரு  கிலோ தக்காளி ஒரு ருபாய்க்கு விற்றது. அப்போது விவசாயிகள் தக்காளியை அறுவடை கூட செய்யவில்லை. கொள்முதல் செய்யச் சொல்லி போராட்டம் நடத்தும் நிலையில் இருந்தனர். தற்போதைய விலை ஏற்றத்தாலும் விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை, இடைத்தரகர்கள்தான் சம்பாதிக்கின்றனர். குளிர்ப்பதன கிடங்குகளை அமைத்து, விளைச்சல் அதிகம் இருக்கும் நாட்களில் தக்காளி போன்ற விவசாய விளைபொருட்களை அங்கு பாதுகாத்து விளைச்சல் குறைந்து, விலை உயரும் நாட்களில் மக்களுக்கு அவற்றை விநியோகம் செய்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட சொன்னால் மணல் குவாரிகளை அறிவிக்கின்றனர், தடுப்பணை கட்டினால் மணல் எடுக்க முடியாது என்பதால் தடுப்பணை கட்ட மறுக்கின்றனர்.  இது விவசாயிகளுக்கு அரசு செய்யும் துரோகம். இதனால் கடந்த ஆண்டில் 620 டிஎம்சி நீர் வீணாக கடலில் கலந்துள்ளது என தெரிவித்தார்.

சென்னை புறநகர் பகுதியில் புதிதாக 10 ஏரிகளை உருவாக்க வேண்டும். அதுதான் உண்மையான நீர் மேலாண்மை, ஆனால் வெறுமனவே வசனம்தான் பேசுகின்றனர். சென்னைக்கு குடிநீர் தரும் 4 பெரிய ஏரிகள் மற்றும் சிறிய நீர்நிலைகளில் மொத்தம் 11 டி எம் சி தண்ணீரை மட்டும்தான் தேக்கி வைக்க முடியும்.  அந்த ஏரிகளும் முறையாக தூர்வாரப்படவில்லை என தெரிவித்தார். 

தொடர்ந்து மேடையில் பேசிய அவர், ஜூலை 14, 1989 அன்று பாமக தொடங்கப்பட்டது. இது இந்தியாவிற்கே முக்கியமான நாள். 34 ஆண்டுகள் வெற்றிகரமாக கட்சியை நடத்துவது சாதாரணம் கிடையாது. எந்த எதிர்பார்ப்பும் இன்றி தமிழகம் முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளுடன் பாமகவை நடத்தி வருகிறோம். எங்களுக்கு பதவி ஆசை கிடையாது. முதலமைச்சர் நாற்காலியை குறிவைத்து அரசியல் செய்யவில்லை. ஆனால் ஆட்சி அதிகாரம் இருந்தால் இன்னும் வேகமாக மக்களை முன்னேற்ற முடியும் என தெரிவித்தார். 

மேலும், ஆட்சியில் இல்லாமலேயே பல சாதனைகளை செய்துள்ள கட்சி பாமக, ஆட்சியில் இல்லாமல் சாதனைகளை செய்வதே உண்மையான சாதனை. முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து கையெழுத்து போடுவது சாதனை அல்ல , எதிர்கட்சியாக இருந்து அவரை கையெழுத்து போட வைப்பதுதான் சாதனை என தெரிவித்தார். 

சமூகநீதி , சமத்துவத்துக்காக பாமகவை தொடங்கினோம். மதுவிலக்கு , புகையிலை எதிர்ப்பு  ,சமச்சீர் கல்வி, நீர் மேலாண்மை உள்ளிட்ட சுற்றுச்சூழல் சார்ந்த விசயங்களை சொன்னாலே பாமகதான் மக்கள் நினைவுக்கு வரும். தமிழகத்தில் ரயில் வழித்தடங்களை அகலப்பாதையாக்கியது , இந்தியாவில் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டுவந்தது பாமக என குறிப்பிட்டார். 

இந்தியாவிலேயே சமூக நீதி, இட ஒதுக்கீட்டுக்காக ராமதாசைப் போல செயல்பட்ட எந்த அரசியல் தலைவர்களும் கிடையாது. தமிழகத்திற்கு 6 வகையான இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்துள்ளார் ராமதாஸ் , இதில் ஏதாவது ஒன்றை தமிழகத்தில் இருக்கும் கட்சிகள் செய்துள்ளனரா..? என கேள்வி எழுப்பிய அவர், அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு , மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தது பாமக.   மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தது பாமக. வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு பெற்றுத்தந்தது பாமக என்றார். 

மேலோட்டமான திட்டங்களை மட்டுமே திராவிடக் கட்சிகள் நடைமுறைப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டிய அவர், அடுத்த தேர்தலுக்கான வாக்குறுதிகளை திராவிடக் கட்சிகள் கொடுக்கின்றன எனவும்  நாங்கள் அடுத்த தலைமுறைக்கானதை வாக்குறிதாகளாக கொடுக்கிறோம் எனவும் ஒரே ஒருமுறை பாமகவிற்கு அங்கீகாரம் கொடுங்கள் என தமிழக மக்களை கேட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

திமுக , அண்ணா திமுக , தேமுதிக மதிமுக , காங்கிரஸ் , அதெல்லாம் என்ன பெயர்..? ஆனால் நாங்கள் பாட்டாளி மக்கள் கட்சினு நாங்கள் என்று பெயர் வைத்துள்ளோம் , நெற்றியில் வியர்வை சிந்தி உழைப்பவர்கள்தான் பாட்டாளிகள் தான் எனவும், பாமக தமிழகத்தை ஆட்சி செய்யும் காலமும், நேரமும் வந்துவிட்டது என்று கூறினார்.

இதையும் படிக்க'ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்' தற்காலிக நிறுத்தம்!: