ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு பண்டிகை தொடக்கம்!!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலுவை இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி லட்சுமி ரவி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இன்று தொடங்கி அக்டோபர் 24ம் தேதி வரை  நவராத்திரி கொலு  கொண்டாட்டங்கள்  ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது. 

தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் ‘நவராத்திரி கொலு’ கொண்டாட்டங்களை  பொதுமக்கள் பார்வையிடலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 150 பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது. 

இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நபர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்கள் பெயர், வயது, பாலினம், முகவரி, தொடர்பு எண், புகைப்பட அடையாள சான்று மற்றும் வருகைக்கான தேதி உள்ளிட்ட விவரங்களை rbnavaratrifest@tn. gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் மற்றும் பிற விவரங்களுடன் அனுப்பப்படும் உறுதிப்படுத்தும் மின்னஞ்சல் விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டதற்கான சான்றாக அமையும் என்று ஆளுநர் மாளிகை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பார்வையாளர்கள், சென்னை ஆளுநர் மாளிகையின் வாயில் எண். 2 இல் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்ட மின்னஞ்சல் மற்றும் அசல் புகைப்பட அடையாள சான்று (விண்ணப்பிக்கும் போது மின்னஞ்சலில் பதிவேற்றம் செய்யப்பட்ட) ஆணவத்துடன் ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன் வர வேண்டும் என்றும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.