நடுவழியில் நின்ற அரசு பேருந்து- பயணிகள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடுவழியில் நின்ற அரசுப்பேருந்தை தள்ளு தள்ளு என கோஷமிட்டப்படி பயணிகள் மற்றும் போலீசார் தள்ளி சென்ற சம்பவம் நடந்துள்ளது.

நடுவழியில் நின்ற அரசு பேருந்து- பயணிகள் அவதி

மதுரையில் இருந்து ராமேஸ்வரம், ராமநாதபுரம், ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி 120 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் சென்று வருகின்றனர். மதுரை - ராமேஸ்வரம் வழித்தடத்தில் கொரோனா பரவல் காரணமாக பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்ட நிலையில் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் என பலரும் அரசு பேருந்துகளையே நம்பி உள்ளனர். 

இதற்கிடையில் அரசு பேருந்துகள் அடிக்கடி நடுவழியில் பழுதாகி விடுவதால் பயணிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் மதுரையிலிருந்து ராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்து இன்று மதியம் பரமக்குடி பேருந்து நிலையம் வந்து பயணிகளை இறக்கிவிட்டு ராமேஸ்வரம் நோக்கி சென்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்து நிலைய நுழைவாயில் அரசு பேருந்து பழுதாகி நின்று விட்டது.  

இதனை அடுத்து பேருந்தில் இருந்த 50 பயணிகள் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். அதன்பின்னர் நடுவழியில் நின்ற பேருந்தை பயணிகளும் ,போலீசாரும் தள்ளு தள்ளு என கோஷமிட்டப்படி தள்ளி சென்றனர். போக்குவரத்து துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே அரசு பேருந்துகள் பழுதாகி விடுவதால் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பயணிகள் தவித்து வரும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருவதால், அனைத்து அரசு பேருந்துகளையும் சீரமைத்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 a