டெங்கு பரவலை தடுக்க நடவடிக்கை... அமைச்சர் மா. சுப்ரமணியன் விளக்கம்...

மழைக்காலம் நெருங்கி வருவதையொட்டி, டெங்கு பரவலை தடுக்கும் வகையில், துரித நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட சுகாதார அலுவலர்களிடம் அறிவுறுத்தப்படும் என அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

டெங்கு பரவலை தடுக்க நடவடிக்கை... அமைச்சர் மா. சுப்ரமணியன் விளக்கம்...

மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் திருச்சியிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில், நேற்று நடைபெற்ற  நான்காவது மெகா தடுப்பூசி முகாம் 24 ஆயிரத்து 882 இடங்களில் நடத்தப்பட்டதாகவும், தமிழகத்தில் இதுவரை 62 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன்,  டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் உள்ளாட்சி நிர்வாகமும், மக்கள் நல்வாழ்வு துறையும் இணைந்து பணியாற்றி வருகிறது என்றும், டெங்கு பரவலை தடுக்கும் வகையில் துரித நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட சுகாதார அலுவலர்களிடம் அறிவுறுத்தப்படும் என்றும் கூறினார்.

தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம் கேட்டு போராடுவதை சுட்டிக் காட்டி பேசிய மா. சுப்ரமணியன், அவர்களை பணி நிரந்தரம் செய்வது சாத்தியமில்லை என்றும், அவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், நீட் தேர்வை தலைகீழாக நின்றாலும் ரத்து செய்ய முடியாது என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு, பா.ஜ.க-வினரை தலைகீழாக நிற்க வைத்து அழகு பார்க்க யாரும் விரும்பவில்லை எனவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் குறிப்பிட்டார்.