இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு...

பள்ளிக் குழந்தைகளைப் பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டுதல் மற்றும் இணையவழி வகுப்புகளுக்கான நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு...

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மாணவர் பாதுகாப்பைத் தொடர்ச்சியாக மேற்பார்வை செய்யவும், அது சார்ந்த நடவடிக்கைகள் குறித்து மதிப்பீடு செய்யவும், ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு அமைக்கப்படும் என்றும்.,

இக்குழுவில் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர் ஒருவர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் இருவர், பள்ளி நிர்வாக உறுப்பினர் ஒருவர், ஆசிரியரல்லாத பணியாளர் ஒருவர் இடம்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு மாதத்திற்குள் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறையை பள்ளிக்கல்வித்துறை உருவாக்கும் என்றும், அனைத்து தரப்பினரும் இந்த மையத்தினை தொடர்புகொண்டு எளிதாக புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்தவும், சுயத் தணிக்கை செய்வதை உறுதி செய்யவும் பள்ளிக் கல்வித்துறையால் உருவாக்கப்பட்ட கட்டகம் வழங்கப்படும் என்றும்,பள்ளிகளைச் சார்ந்த அனைத்து அங்கத்தினருக்கும் பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்த முழு புரிதல் உண்டாகும் வகையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இணையவழிக் கற்றல்-கற்பித்தல் நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வகுப்பறைச் சூழலுக்கு ஏற்றவோறு கண்ணியமாக உடை அணிய வேண்டும் என்றும், இணையவழி வகுப்புகளை முழுமையாகப் பதிவு செய்வதோடு, அதனை பாதுகாப்பு ஆலோசனைக்குழுவினர் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, மாணவர்கள் தங்களின் புகார் மற்றும் கருத்துகளை எளிதில் தெரிவிக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பெட்டிகள் வைக்கப்படும் என்றும், ஆண்டுதோறும் நவம்பர் 15 முதல் 22 வரை குழந்தைகள் துன்புறுத்தலை தடுக்கும் வாரம் என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.