தனியார் பள்ளிகளை கண்காணிக்க அரசு அதிகாரி...! உயர்நீதிமன்றத்தில் மனு...!!

தனியார் பள்ளிகளை கண்காணிக்க அரசு அதிகாரி...! உயர்நீதிமன்றத்தில் மனு...!!

மெட்ரிகுலேசன்  பள்ளிகளில் அரசு சார்பில் தனிக் கல்வி அதிகாரியை நியமித்து கண்காணிக்க வேண்டும் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை  சேரந்த அய்யா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் நமது அரசின் கீழ் இயங்கி வருகின்றன. தொடக்கத்தில் கல்வி அறிவு அனைவருக்கும் கிடைக்கும் வகையில் தொடங்கப்பட்ட தனியார் பள்ளிகள் தற்போது பணம் சம்பாதிக்கும் மையங்களாக  மாறியுள்ளன. தமிழ்நாட்டில் தற்போது தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் அதிகமாகி உள்ளது. மேலும், விடுதியுடன் கூடிய தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளும் உள்ளன.

தற்போது, பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அதிக மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற நோக்கில் சனிக்கிழமை கூட விடுமுறை இல்லாமல்  சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. எனவே மாணவ,  மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மதிபெண் என்ற ஒரே குறிக்கோளை கொண்டு தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகள் செயல்படுகின்றன. இதில் சில தனியார் பள்ளிகளில், விடுதிகளும் உள்ளன. அங்கு  சில மாணவிகள் மீது  பல்வேறு விதமான துன்புறுத்துல்களை நடக்கின்றன. சென்ற ஆண்டு கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் இதற்கு உதாரணமாகும். விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள் தற்கொலை செய்வது தொடர்கிறது. எனவே, திருநெல்வேலியில் 300 அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் அனைத்துத் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும், அரசு சார்பில் தனிக் கல்வி அதிகாரியை நியமித்து  தனியார் பள்ளியின் செய்ல்பாட்டை கண்காணிக்க வேண்டும். மேலும் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் மாணவியர் விடுதிகளில் இரவு நேரத்தில் ஒரு பெண் காவலரை நியமிக்க வேண்டும்" என மனுவில் கூறி உள்ளார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி, மற்றும் நீதிபதி சுப்பரமணியன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்  தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால், கால அவகாசம் கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஜூன் மாதம் முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.