"ஆர் எஸ் எஸ் செய்தி தொடர்பாளர் போல் பேசுகிறார் ஆளுநர் ரவி" அமைச்சர் துரைமுருகன்!!

தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என். ரவி, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். செய்தி தொடர்பாளர் போல் பேசுவதாக அமைச்சர் துரை முருகன் குற்றம் சாட்டியுள்ளார். 

நாயக்கனேரி பட்டியலின தலைவர் பதவியேற்பு குறித்து, ஆளுநர் ஆர்.என். ரவி பேசிய கருத்துக்கு அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டள்ளார். அதில், நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில் பதவி ஏற்க முடியாத நிலை உள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.  

பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகரித்து வரும் கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர் நீதிமன்ற உத்தரவில் உள்ள ஒரு ஊராட்சியை பற்றி மட்டும் பேசுவதன் உள்நோக்கம் என்ன? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால் “அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்” என்று சட்டம் பிறப்பித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்றவர்களை கடிந்து கொண்டிருக்கலாம் என்றும் பழங்குடியினருக்கு எதிராக மத்திய பிரதேசத்தில் 17 விழுக்காடு அளவிற்குக் குற்றங்கள் அதிகரித்திருப்பதைக் கண்டு பதற்றப்பட்டு பேசியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார் அமைச்சர் துரைமுருகன்.

மேலும், உண்மைக்கு மாறான இத்தகைய பேச்சுகளைத் தவிர்த்து, மாநில சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கும், அரசு நிர்வாகத்தின் கோப்புகளிலும், அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களை காப்பாற்ற அவர்கள் தொடர்பான லஞ்ச வழக்குகளில் கையொப்பமிடாமல் வைத்துள்ள கோப்புகளிலும் கையெழுத்து போடுவதில் தனது நேரத்தை உருப்படியாகச் செலவிட வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.