இருவரின் உயிரிழப்பால்; ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்த முதலமைச்சர்!

இருவரின் உயிரிழப்பால்; ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்த முதலமைச்சர்!

ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

76-வது சுதந்திர தின விழாவை ஒட்டி, ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாட்டின் 77-வது சுதந்திர நாளை கொண்டாடும் நேரத்தில், சென்னையை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் மற்றும் அவரது தந்தை செல்வசேகர் ஆகிய இருவரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட செய்தி, நம் முன்னோர் நமக்களித்த விடுதலை எல்லோருக்குமானதா அல்லது வசதிபடைத்த வெகு சிலருக்கானதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

அரியலூர் அனிதா தொடங்கி இதுவரை விலைமதிப்பில்லா பல மாணவ செல்வங்களின் உயிர்களை, நீட் தேர்வு முறை காரணமாக நாம் இழந்திருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு விலக்குக்கு ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது மாணவர்களையும், இளைஞர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : நாட்டுடைமையாக்கப்பட்டது பேராசிரியர் மா.நன்னன் நூல்கள்...ரூ.10 லட்சம் காசோலையை வழங்கினார் முதலமைச்சர்!

இந்நிலைமாறுவதற்காக நீட் தேர்வுக்கு விலக்கு கோரி, சட்டம் இயற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ள அவர், ஏழை - எளிய மற்றும் விளிம்பு நிலை அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை சிதைப்பேன் என்ற ஆளுநரின் பேச்சு கல்வித்துறை மீது நடத்தப்படும் சதியாக கருதுவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் வகையில் பேசிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், இதன் அடையாளமாக ஆகஸ்ட் 15-ம் தேதி, ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேநீர் விருந்தினை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.