திருக்குறள் பற்றிய ஆழ்ந்த ஞானம் கிடையாது...ஆளுநரை சாடிய வைகோ!

திருக்குறள் பற்றிய ஆழ்ந்த ஞானம் கிடையாது...ஆளுநரை சாடிய வைகோ!

தமிழக அரசின் திட்டங்களை முடக்க ஆளுநர் முயற்சிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

அண்மையில், திருக்குறள் குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் இன்று திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ”ஆளுநர் ஆர்.என்.ரவி திருக்குறள் பற்றிய ஆழ்ந்த ஞானம் இல்லாத போதிலும் அது குறித்து திரும்பத் திரும்ப தவறாக பேசிக் கொண்டிருக்கிறார். இந்துத்துவ கருத்துக்களை எப்படியும் தமிழ்நாட்டில் திணித்து விட வேண்டும் என்று சங்கபரிவார் இயக்கங்கள் துடித்து கொண்டு இருக்கும் நிலையில், அவர்களுக்கு துணையாக ஆளுநர் ரவி  செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

இதையும் படிக்க: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு தயாராக உள்ளதா..? கமல்ஹாசன் கேள்வி!

திருக்குறளைப் பற்றி ஆல்பர்ட் சுவைட்சரை விடவா ஆராய்ச்சி செய்ய முடியும் என்று கூறிய அவர்,  உலகிலே திருக்குறளுக்கு நிகரான நூல் ஒன்றும் இல்லை என்றும், பௌத்த மதத்தில் கூட இப்படிப்பட்ட கருத்துக்கள் இல்லை, அப்படிப்பட்ட உயர்ந்த கருத்துக்களை திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார் என்று ஆல்பர்ட் சுவைட்சர்  கூறியிருக்கிறார் என்று வைகோ சுட்டிக்காட்டி பேசினார். தொடர்ந்து பேசிய அவர், அதைப்போல ஜி. யு போப்பும் சரியான முறையில் தான் திருக்குறளை மொழி பெயர்த்து இருப்பதாகவும் திட்டவட்டமாக கூறினார். 

அதேசமயம், ஆளுநர்  தமிழக அரசு நிறைவேற்றிய 14 மசோதாவிற்கு இதுவரையிலும் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதன்மூலம் தமிழக அரசின் திட்டங்களை ஆளுநர் முடக்க முயற்சிக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது" என்றும் குற்றம் சாட்டி பேசினார்.