தமிழ்நாடு முழுவதும் "பசுமை தமிழகம் திட்டம்".. 261 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை - வனத்துறை அமைச்சர்

2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாடு முழுவதும் பசுமை தமிழகம் திட்டம் மூலம் 261 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் "பசுமை தமிழகம் திட்டம்".. 261 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு  நடவடிக்கை  - வனத்துறை அமைச்சர்

சட்டப்பேரவையில், வினாக்கள் விடைகள் நேத்தில், வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், வேலூர் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் மரக்கன்றுகள் நட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு வனத்துறை அமைச்சர் குன்னூர் ராமச்சந்திரன் பதில் அளித்து பேசுகையில், 2022-23ம் ஆண்டு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 75 லட்சத்து 94 ஆயிரத்து 900 மரக்கன்றுகள் நடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

மேலும், தமிழ்நாட்டில் 23 புள்ளி 96 சதவிகிதமாக உள்ளதை, 33 சதவிகிதமாக வனப் பரப்பு அளவை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதனடிப்படையில் ஆண்டுக்கு 32 கோடி மரங்கள் நடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு முழுவதும் பசுமை தமிழகம் திட்டம் மூலம் 261 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு  நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

விவசாயப் பகுதிகளில் காட்டு பன்றிகளின் அத்து மீறல்களை கருத்தில் கொண்டு காட்டுப் பன்றிகளை சுடுவதற்கான அனுமதியை மத்திய அரசிடம் கோரியுள்ளதாக கூறிய அவர், அதற்கான அனுமதி பெற்றவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.