தமிழகம் முழுவதும் இன்று குரூப்- 2 தேர்வு தொடங்கியது

தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ காலிப் பணியிடங்களுக்கான தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் இன்று குரூப்- 2 தேர்வு தொடங்கியது

எழுத்தர், கணக்காளர்,  இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர், நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 48 வகையான பணியிடங்களுக்கு குரூப் 2 தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த 2 ஆண்டுகளாக தேர்வுகள் எதுவும் நடைபெறாத நிலையில் நிகழாண்டு தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.  தமிழகத்தில் 5 ஆயிரத்து 529 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சுமார் 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் தேர்வெழுத விண்ணப்பித்தனர்.

இந்நிலையில் இவர்களுக்கான தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. அதன்படி காலை 9 மணிக்கு தேர்வர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். 9 முப்பது மணி முதல் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தேர்வு நடைபெறும் வளாகத்திற்குள் 8.59 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் அனுமதி கிடையாது என்பதால் கதவுகள் பூட்டப்பட்டன. தாமதமாக வருபவர்கள் நிச்சயம் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இதனிடையே, தேர்வு எழுத வருபவர்கள் அனுமதி சீட்டுடன் ஏதாவது ஒரு அடையாள அட்டையை எடுத்துவர வேண்டும் என்றும், கருப்பு நிற பால் பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.