ஹாமூன் புயல் எதிரொலி: 9 துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் கூண்டுகள்!

ஹாமூன் புயல் எதிரொலியாக சென்னை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சாிக்கை கூண்டு ஏற்ற இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 

மேற்கு மத்திய அரபிக்கடலில் மிகக் தீவிரமான தேஜ் புயல் 9 கிமீ வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து கொண்டு வருகிறது. இந்த மிக தீவிர புயல் இன்று அதிகாலை வரை வடமேற்கு நோக்கி நகர்ந்து புயலாக வலுவிழந்து ஏமன் கடற்கரையை அல் கைதாவுக்கு அருகே கடக்க அதிக வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு, 125 முதல் 135 கிலோ மீட்டா் வேகத்திலும், இடையே 150 கிலோ மீட்டா் வேகத்திலும் கரையை கடக்க வாய்ப்புள்ளது.

மேற்கு மத்திய வங்க கடலில் இருந்த ஆழமான காற்றழுத்த மண்டலம் வடக்கு- வடகிழக்கு நோக்கி நகர்ந்து புயலாக தீவிரமடைந்தது. இதற்கு ஹமூன் என பெயாிடப்பட்டுள்ளது. இந்த புயலானது பாரதீப்பில் தென்கிழக்கே சுமார் 230 கிலோ மீட்டா் தொலைவில், திகாவிலிருந்து 360 கிலோ மீட்டா் தெற்கே மற்றும் தென்மேற்கே பங்களாதேஷில் இருந்து 510 கிலோ மீட்டா் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இந்த ஹமூன் புயல் இன்று வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இது கிட்டத்தட்ட வடக்கு- வடகிழக்கு நோக்கி நகர்ந்து, நாளை நண்பகலில் கெபுபாரா மற்றும் சிட்டகாங்கிற்கு இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக பங்களாதேஷ் கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில் ஹாமூம் புயல் எதிரொலியாக சென்னை, கடலூா், நாகை, காட்டுப்பள்ளி, புதுச்சோி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சாிக்கை கூண்டு ஏற்ற இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சாிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.