திமுக, அதிமுக வினர் இடையே கடும் வாக்குவாதம்- நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டதால் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் திமுக, அதிமுக வினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு நாற்காலிகள் துக்கி வீசப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

திமுக, அதிமுக வினர் இடையே கடும் வாக்குவாதம்- நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டதால் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை  அருகே ஊராட்சி ஒன்றியக்குழு அவசரக் கூட்டம் நடைபெற்றது. அதிமுகவை சேர்ந்த ஒன்றியக்குழு தலைவர் ரெஜினா நாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ரூபாய் 71 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் பெறுவதற்கான தீர்மானங்கள் வைக்கப்பட்டன.

இதற்கிடையில் கடந்த ஒன்றரை வருடங்களாக நடந்த திட்டப் பணிகளுக்கு  தற்போது அவசரக் கூட்டம் நடத்தி தீர்மானம் வைக்கப்பட்டதற்கு  திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் ஒன்றியக்குழு தலைவர் ரெஜினா நாயகம்  மற்றும் துணைத்தலைவர் யாகப்பன் ஆகியோர் தீர்மானம் நிறைவேற்றுவதில் முனைப்பு காட்டினர்.  

இதனால் ஆத்திரமடைந்த கவுன்சிலர் ஒருவர் நாற்காலியை எடுத்து கூட்டத்தின் நடுவே வீசி எறிந்தார். இந்நிகழ்வால் அங்கு மேலும் பதட்டமான சூழ்நிலை உருவானது. இதனை தொடர்ந்து கூட்டம் முடிந்ததாக கூறி வெளியேறிய நிலக்கோட்டை அதிமுக ஒன்றியச் செயலாளர் மற்றும் ஒன்றியக்குழு துணைத் தலைவருமான யாகப்பனை திமுக கவுன்சிலர்கள் முற்றுகையிட்டு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

அதிமுக தலைவர் மற்றும் துணைத் தலைவரின் எதேச்சையான போக்கை கண்டித்தும் , கூட்ட அரங்கில் நுழைந்து தகராறில் ஈடுபட முயன்ற அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,  திமுக ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன் மற்றும் சௌந்தர பாண்டியன் ஆகியோர் தலைமையில்   ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் புகார் மனு அளித்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.