திருப்பூரில் நள்ளிரவில் பெய்த கனமழை... குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழைநீர்...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மழைநீர் சூழ்ந்த வீடுகளில் இருந்த 5 குழந்தைகள் உட்பட 11 பேரை தீயணைப்பு துறையினர் படகுகள் மூலம் மீட்டனர். 

திருப்பூரில் நள்ளிரவில் பெய்த கனமழை... குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழைநீர்...

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது.  பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளான பொங்கலூர், பனப்பாளையம், காமநாயக்கன் பாளையம், அவினாசிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை ஆரம்பித்த கன மழை நள்ளிரவு வரை நீடித்தது. இதன் காரணமாக கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் அவினாசிபாளையம் பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக பாலாஜி நகர் குடியிருப்பு பகுதிகளில் இருந்த வீடுகளை மழை நீர் சூழ்ந்தது. இதனால் காலையில் வீட்டில் இருந்தவர்கள் வெளியில் வர முடியாமல் தவித்தனர். வீட்டில் இருந்தவர்கள் அவினாசிபாளையம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

காவல் துறையினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் வீடுகளில் சிக்கியிருந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களை ரப்பர் படகு மூலம் மீட்டு வந்தனர். மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள அரசுப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.