இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்த மழை... வடகிழக்கு பருவமழையால் தொடர்ந்து நீடிக்கும் குளிர்ச்சி...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்த மழை... வடகிழக்கு பருவமழையால் தொடர்ந்து நீடிக்கும் குளிர்ச்சி...

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கி, கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் இரவு முழுவதும் மழை விட்டு விட்டு பெய்தது. தேனாம்பேட்டை, கோயம்பேடு, வடபழனி, கோடம்பாக்கம், நந்தம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்தது.

கோவை மாவட்டம் சூலூரில் பெய்த கனமழையால், அங்குள்ள சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்களை சீரான வேகத்தில் இயக்க முடியாமல், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். மேலும், கண்ணம்பாளையம், நீலாம்பூர் பாப்பம்பட்டி, கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் அங்குள்ள குளம் குட்டைகளில் தண்ணீர் நிரம்பி வருவவதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளது. விளாங்குடி கிராமத்தில் காலனி தெருவில் வசித்த முதியவர் அர்சுனன், தமது வீட்டின் முன்பு தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்தியுள்ளார். அப்போது மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, குரிசிலாப்பட்டு கந்திலி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே இருந்தனர். மழை காரணமாக அப்பகுதிகளில் உள்ள அணைக்கட்டுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காரைக்கால் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக, நகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. நீர் வெளியேற சரியான வடிகால் இல்லாததால், மழைநீர் தேங்கி நிற்கிறது. இதைப்போல காரைக்கால் கடற்கரை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கடற்கரை சாலையிலும் மழைநீர் வெளியேற வழியில்லை. எனவே, தேங்கியுள்ள மழைநீரை அகற்ற, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.