14 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழை பெய்யும்... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

சென்னையில் விடிய விடிய பரவலாக பெய்த கனமழை

14 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழை பெய்யும்... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் தற்போது வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதற்கு ஆதாரமாக வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த ஆண்டுக்கான பருவமழைக்கு இந்த காற்றழுத்தம் அச்சாரமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று மிக கனமழை பெய்துள்ளது. தஞ்சாவூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு  மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்துள்ளது.

சென்னையில் நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது. இந்நிலையில், தென் மேற்கு வங்கக் கடல் பகுதி மற்றும் இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை  தற்போது தீவிரம் அடைய தொடங்கியுள்ளது.

இதனால்,  கன்னியாகுமரி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், பிற மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யும் பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை கொண்டு இருப்பதால், தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் வரும் 30ம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும் என்றும், குமரிக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.