ஆலயங்களைத் உடனடியாக திறக்க வேண்டும்... இந்து முன்னணி அமைப்பினர் தூத்துக்குடியில் சூடம் ஏற்றி வழிபாடு போராட்டம்!

தூத்துக்குடியில் இந்து ஆலயங்களைத் திறக்கக் கோரி இந்து முன்னணி அமைப்பினர் ஆலயம் முன்பு சூடம் ஏற்றி வழிபட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலயங்களைத் உடனடியாக திறக்க வேண்டும்... இந்து முன்னணி அமைப்பினர் தூத்துக்குடியில் சூடம் ஏற்றி வழிபாடு போராட்டம்!
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆலயங்களை திறக்க தமிழக அரசு தொடர்ந்து தடைவிதித்துள்ளது.
 
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை திறக்கக் கோரி இந்து அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் அந்தந்த பகுதி நிர்வாகிகள் தலைமையில் வீடுகளுக்கு முன்பு கோலம் போட்டும், ஆலயத்தின் முன்பு சூடம் ஏற்றி வழிபட்டும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில், தூத்துக்குடி பாளை ரோட்டில் உள்ள வேம்படி இசக்கிஅம்மன் கோயிலில், தூத்துக்குடி  மேற்கு மண்டலம் சார்பாக எல்.ஆர்.சரவணக் குமார் தலைமையில் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த கிருஷ்ணராஜ், ஆழ்வார், சுடலைமணி, உள்ளிட்டோர் கோயில்களை திறக்க தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து, ஆலயம் முன்பு சூடம் ஏற்றி வழிபட்டனர்.