அரசின் அறிவிப்பை மீறி தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

அரசின் அறிவிப்பை மீறி தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி கலவரத்தில் தனியார் பள்ளி சூறையாடப்பட்டதை கண்டித்து, அரசின் அறிவிப்பையும் மீறி பல்வேறு மாவட்டங்களில், தனியார் பள்ளிகள் செயல்படவில்லை.

தனியார் பள்ளி சூறையாடப்பட்டதை கண்டித்து தனியார் பள்ளிகள் இன்று செயல்படாது:

கள்ளக்குறிச்சி போராட்டம் காரணமாக தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இன்று செயல்படாது என்று தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்திருந்தார். 

பள்ளிகள் வழக்கம் போல் இயங்க வேண்டும் தமிழக அரசு:

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவனின் அறிவிப்பிற்கு  மறுப்பு தெரிவித்து, பள்ளிகள் வழக்கம் போல் இயங்க வேண்டுமென தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

அரசின் அறிவிப்பை மீறிய பள்ளிகள்:

இந்த நிலையில், இன்று தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 218 தனியார் பள்ளிகள் அரசின் அறிவிப்பை மீறி இயங்கவில்லை. இதனால் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் திரும்பி சென்றனர்.

அதேபோன்று புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள தனியார் பள்ளிகளில், இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சமூகவிரோத செயல்களை கண்டித்தும், குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தனியார் பள்ளிகளுக்கு உரிய பாதுகாப்பு வேண்டியும் மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறு சங்கத்தினர் மனு அளித்தனர்.

விடுமுறை அளித்த பள்ளிகள்:

இதேப்போல, திருப்பத்தூரில் அரசு அறிவிப்பையும் மீறி ஒரு சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. வழக்கம் போல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

ஏற்கனவே தமிழக அரசின் அனுமதியின்றி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கக்கூடாது என்றும், மீறி விடுமுறை அளிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தது. இருப்பினும் அதனை மீறி பழனியில் சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.