ஐ.டி.ரெய்டு...! திமுகவை அச்சுறுத்த முடியாது -உதயநிதி...!! 

ஐ.டி.ரெய்டு...! திமுகவை அச்சுறுத்த முடியாது -உதயநிதி...!! 

வருமான வரிச் சோதனைகளை ஏவி விடுவதன் மூலம், திமுகவை அச்சுறுத்த முடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் விருதுகள் வழங்கும் விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார். 

இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை முதன்மை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ், அண்ணா பல்கலைக்கழக ஆட்சி குழு உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினருமான பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி பேசும் போது, பள்ளியில் படிக்கும் போது என்.சி.சியில் சேர முயற்சித்து வாய்ப்பு கிடைக்காததால் நாட்டு நலப்பணி திட்டத்தில் இணைந்து மக்களுக்காக பணியாற்றினேன் என்றார். மேலும் அண்ணா பல்கலைக் கழக நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் குடியரசுத் தலைவரிடம் விருது பெற்றதற்கு வாழ்த்துகளை கூறிய அவர், ராணுவம் மற்றும் காவல் துறையினர் போல் பேரிடர் காலங்களில் நாட்டு நலப்பணி திட்ட இளைஞர் மேற்கொண்ட பணிகளுக்கு நன்றி கூறினார்.

தொடர்ந்து, மருத்துவமனைகளில் ரத்த தானம் தேவைப்பட்டால் முதலில் உதவ முன் வருவது, நாட்டு நாலப்பணித்திட்ட மாணவர்கள் தான் என்றும் சமூகத்திற்கு ஆக்கப்பூர்வமான உதவிகள், விழிப்புணர்வு, சமூக அமைப்புகளை சரி செய்யும் பணிகளை நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், நாட்டு நலப்பணித் திட்டத்திற்கு நிதி ஆதாரத்தை உயர்த்தித் தர கோரிக்கை விடப்பட்டுள்ளது குறித்து பரிசீலிக்கப்படும் எனக் கூறிய உதயநிதி நாட்டு நலப்பணி திட்டத்தில் பணியாற்றி வரும் மாணவர்கள் சமூக சேவை செய்யும் அதே நேரத்தில், படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கெண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழாவில், கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவிற்காக குடியரசுத் தலைவரை அழைக்க முதலமைச்சர் டெல்லி சென்றுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் ஒரு வாரத்தில் செய்தியாளர்களை சந்திப்பேன் எனக் கூறிய அண்ணாமலையை ஏன் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கவில்லை? என, அவர் வினவினார்.

தொடர்ந்து, அண்ணாமலை குறித்தும் பாஜக குறித்தும் வெளியான ஆடியோவிற்கு என்ன விளக்கம் அளித்தார்கள் என்றும் கர்நாடகாவில், நேற்று தமிழ்த்தாய் வாழ்த்தை அவமரியாதை செய்த அண்ணாமலையை ஏன் யாரும் கேள்வி கேட்கவில்லை என உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.

மேலும் வருமான வரித்துறை சோதனைகளுக்காக திமுக ஒருபோதும் அஞ்சாது என்றும், திமுகவை ஒருபோதும் யாராலும் அச்சுறுத்த முடியாது என்றும்.உதயநிதி ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.