சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றிருந்தால் எச். ராஜா தான் முதலமைச்சராக இருந்து இருப்பார்... திருமா சுளீர்

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றிருந்தால் எச் ராஜா தான் முதலமைச்சராக இருந்து இருப்பார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றிருந்தால் எச். ராஜா தான் முதலமைச்சராக இருந்து இருப்பார்... திருமா சுளீர்

திரிபுரா மாநிலத்தில் இடதுசாரிகள் மற்றும் இசுலாமியர்கள் மீதும் பாஜகவினர் நடத்திய வன்முறையைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்றது.

அப்போது பேசிய  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கூறுகையில்,  உள்ளாட்சி தேர்தலுக்கான வன்முறை திரிபுராவில் நடந்துள்ளது என்றும்  கடந்த இடதுசாரிகளின்  ஆட்சி வரலாற்றை அழிக்கும் வகையில் சிலைகளை உடைக்கும் செயலில் பாஜக ஈடுப்பட்டு வருகிறது எனக் குற்றம் சாட்டினார்

சங்பரிவார் அமைப்புகளின் செயல்திட்டம் தான் பாஜக செயல்படுத்தி வருகிறது. அதனால் தான் பாஜகவை எதிர்க்கிறோம். பாஜகவின்  செயல்பாட்டை சங்பரிவார் அமைப்பே முடிவு செய்கிறது. வேளாண் சட்ட திரும்ப பெறுதலில் சங்பரிவார் முடிவு இருக்கும் என்றார்.

பாமக தலைவரான ராமதாஸ் ஆரம்ப காலகட்டத்தில் பெரியார் மற்றும் மார்க்சிய கொள்கைகளில் ஈடுபாடு உடையவராக காணப்பட்டதாகவும் அதன்பின்னர் சமுதாய அரசியலில், சங்பரிவார் அமைப்பு விரித்த வலையில் சிக்கி சங்பரிவார்கள் அமைப்பின் செயல்திட்டத்தை இவர் காப்பியடித்து தலித் மக்களுக்கு எதிராக செயல்பட்டார் என்றும் இதனால் ராமதாஸ் அகில இந்திய அளவில் கன்ஷிராம் போன்ற உயர்ந்த தலைவர் இடத்தில் அமர வேண்டியவர் 60 சீட்டுக்கள் சுருங்கி கிடக்கிறார் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்த நிலையில் அந்தக் கூட்டணி வெற்றி பெற்றிருந்தால் தமிழகத்தின் முதலமைச்சராக எச் ராஜா அவர்களே இருந்திருப்பார் என்றும் தெரிவித்தார்.

மேலும் 2024 பாஜக மீண்டும் வந்து விட்டால் நாட்டின் பெயர் மாற்றப்படும். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.