தீர்வு இல்லை என்றால் தற்கொலை தான் முடிவு... கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட காவலர் தம்பதி...

தமிழக முதல்வர் உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட காவலர் தம்பதி.

தீர்வு இல்லை என்றால் தற்கொலை தான் முடிவு... கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட காவலர் தம்பதி...

திருச்சியில் கே.கே. நகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஜனார்த்தனன், அவரது மனைவி சுமதி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் திருச்சி மாநகரில் மார்க்சிங் பேட்டை பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் சி- 10  என்ற வீட்டில் குடியிருந்து வருவதாகவும், தங்களது பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில், காவல்துறையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் எனவும்,   இதனால் தங்களுக்கு தங்கள் வீட்டிற்கு பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமரா பொருத்தி இருந்ததாகவும், தற்போது அதனை பாலக்கரை காவல்துறையினர் வேண்டுமென்றே அகற்றிச் சென்றதாகவும் குற்றம்சாட்டிய காவல்துறை தம்பதியினர்,  
அதே நேரத்தில் காவல் துறையில் பணியாற்றும் தங்களுக்கு காவலர் குடியிருப்பில்  போதிய பாதுகாப்பு இல்லை எனவும்  வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் காவலர் குடியிருப்பில் ஏற்கனவே தலைமை காவலர் சிதம்பரம் என்பவர் வீட்டில் 33 பவுன் நகை திருடு போனதாகவும், அதேபோல இருசக்கர வாகனங்கள் திருட்டு போனதாகவும் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் காவலர் குடியிருப்பு பகுதியில் கஞ்சா, மதுபோதையில் இளைஞர்கள் சுற்றித் திரிவதாகவும்,  இதனால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் தங்கள் வீட்டில் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை பாலக்கரை காவல்துறை ஆய்வாளர் வந்து அகற்றியாகவும் கண்ணீர் மல்க தெரிவிக்கும் காவல்துறை தம்பதியினர்,  
காவல்துறையில் பலர் நல்ல விஷயங்கள் செய்ய முன்வருவதில்லை எனவும், அதே நேரத்தில் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் சக காவல்துறையினரை அழிக்க எடுக்கும் நடவடிக்கைகளை, ஏன் நன்மை செய்ய எடுக்கவில்லை எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

காவல்துறை நன்றாகத்தான் உள்ளது.  அதில் ஒரு சில காவல்துறையினர் தகாத செயல்களில் ஈடுபடுவது வேதனை அளிப்பதாகவும்,  மேலும் காவல்துறையில் பணியாற்றும் நபர்களிடம் குறைகளை கேட்பது கிடையாது, கடமைக்கு குறைகளை கேட்பதாக  கூறுகின்றனர்.

மேலும் தமிழக அரசு தற்போது காவலர்களுக்கு வார ஓய்வு அளித்திருந்தாலும் அது நடைமுறைக்கு வரவில்லை. இதனால் தங்கள் குடும்பத்துடன் குழந்தைகளுடன் நிம்மதியாக இருக்க முடியவில்லை என கூறும் இந்த தம்பதியினர்,  உடனடியாக தமிழக முதல்வர் இப்பிரச்னையில் தலையிட்டு தங்களுக்கு நல்லதொரு தீர்வை வழங்க வேண்டும் எனவும்,  இல்லை என்றால் மன உளைச்சல் ஆளான நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என வீடியோ வெளியிட்டுள்ளது தற்போது காவல் துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.