காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை...! தப்பி ஓடிய கும்பல்...!

குடியிருப்பு பகுதியில், சட்டவிரோதமாக 24 மணி நேரமும் இயங்கும் பார் - ஐ அகற்ற பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை...!

காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை...! தப்பி ஓடிய கும்பல்...!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மங்கலம் இடுவாயில் அரசு மதுபான கடை உள்ளது. குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை ஒட்டி ஃபுல்லா மோகன் என்பவருக்கு சொந்தமான பார் சட்டவிரோதமாக இரவும் பகலும் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்தது. இதனால் வழித்தடங்களில் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் நடந்து செல்லவே மிகவும் அச்சப்படுவதாகவும், போதை ஆசாமிகளால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் அப்பகுதியினர் பலமுறை மாவட்ட ஆட்சியர் முதல் மங்கலம் காவல் நிலையம் வரை புகார் அளித்துள்ளனர்.

இந்த கடையை மூட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில் வேல் தலைமையில், சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் பார் செயல்படுவதை எதிர்த்து முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனாலும் அதிகாரிகள் கடையை, குடியிருப்புகளுக்கு நடுவில் இருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை, அப்பகுதியைச் சேர்ந்த பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் சட்டவிரோதமாக, பாரை ஒட்டிய காட்டுப்பகுதியில் மது விற்பனை  செய்துள்ளனர். இதனை அறிந்து அங்கு திரண்ட பொதுமக்கள் மற்றும் பாஜகவினரை கண்ட அந்த கும்பல், பாட்டில்களை போட்டுவிட்டு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து 16 மது பாட்டில்களையும் மங்கலம் காவல் நிலையத்தில் அப்பகுதி மக்கள் ஒப்படைத்து உள்ளனர். மேலும் இந்த சட்ட விரோதமான மது விற்பனையை போலீசார் தடுத்து நிறுத்துவதோடு, பொதுமக்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் இந்த டாஸ்மாக் அரசு மதுபான கடையை, இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளனர். 

இதை தொடர்ந்து சட்டவிரோதமான முறையில் மது விற்பனையானது  இப்பகுதியில் நடைபெற்றால் பொதுமக்களை திரட்டி சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்த இருப்பதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.