தமிழகத்தின் பெரும்பாலான பகுதியில் வெள்ள நீர் வடியாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...

தமிழகத்தில் மழை ஓய்ந்த பிறகும் சில இடங்களில் இன்னும் வெள்ளநீர் வடியாத காரணத்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான பகுதியில் வெள்ள நீர் வடியாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...

சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை யமுனாநகர் பகுதியில் கனமழை காரணமாக, குடியிருப்பு பகுதிகளை சுற்றி இடுப்பளவு தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்ல முடியாமல் அவதிப்படும் அப்பகுதி மக்கள், இதுவரை அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனிடையே, வெள்ளநீரை கடந்து செல்வதற்கு, தெர்மாகோல் வைத்து உருவாக்கப்பட்ட மிதவையை பயன்படுத்தி வருகின்றனர். குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீரை அகற்றுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கூடுதலாக மின் மோட்டார்கள் வைத்து மழைநீரை அகற்ற வேண்டும் எனவும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த வெள்ளநீரை அகற்றாததால், பொதுமக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆம்பூரில் தொடர் மழை காரணமாக ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறுவதால், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. துத்திபட்டு ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில், குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனை கண்டித்து சில தினங்களாக அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது எம். எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

உடனடியாக பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாய்கள் தூர்வாரும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இருப்பினும் குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர் வடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைப்போல மாதனூர் பேருந்து நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள வெள்ள நீரை வெளியேற்றாததால், பாதிப்படைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.