தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பருவமழை... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பருவமழை மற்றும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பருவமழை... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பருவமழை மற்றும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 10 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் கீழையூர் பகுதியில் உள்ள வீரட்டானேஸ்வரர் கோயிலின் உள்ளே மழைநீர் புகுந்தது. மேலும், கோயிலின் மேற்கூரைகள் சிதிலமடைந்து காணப்பட்டதால், அதன் வழியாகவும் மழைநீர் உள்ளே புகுந்தது. இதனால் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் அனைவரும் சற்று அவதிப்பட்டனர். இனி வரும் காலங்களில் கோயிலின் உள்ளே மழைநீர் புகாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சேதமடைந்த மேற்கூரைகளை விரைந்து சரிசெய்ய வேண்டும் எனவும், அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஏரி உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகள் நிரம்பிய நிலையில், கலங்கல் வழியாக உபரி நீர் வெளியேறி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஓசூர் கிராமத்தில் உள்ள பூதேரி நிரம்பி, ஆள் உயரத்திற்கு தரைப்பாலத்தில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மூடுர், எட்டிக்குட்டை, வேப்பங்கரணை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வெளியே செல்ல முடியாமல், கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் ஆந்திரா வனப்பகுதியில் இருந்து வந்த காட்டாற்று வெள்ளம் காரணமாக, தமிழக-ஆந்திரா மாநில எல்லையில் அமைந்துள்ள ஓதி குப்பம் ஏரி, ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது. அருகில் உள்ள வரட்டனபள்ளி, பாசவன்னா கோவில், காளி கோயில், மட்டார பள்ளி ஆகிய கிராமங்களில் தண்ணீர் புகுந்ததால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தக்காளி செடிகள் மற்றும் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் களத்தூரான் கால்வாய் கரை உடைந்ததால், அருகே உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வாலாஜாபாத் அடுத்த தென்னேரி ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் காரணமாக, களத்தூரான் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மகாலட்சுமி நகர் பகுதி முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, குட்டப்பள்ளி கிராமத்திற்கு செல்லும் தற்காலிக சாலை அடித்து செல்லப்பட்டது. இதனால் ஊரை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு, கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி சென்றபோது, அந்த கயிறும் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டது. இதனால் வெளியே சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல், கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் கனமழை காரணமாக, பெரிய ஏரிக்கு செல்லும் வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சந்தப்பேட்டையில் சாலைக்கு மேலே அதிகளவு தண்ணீர் சென்றதால், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அந்த பாதை தடுப்புகளால் மூடப்பட்டது. போலீசாரின் அறிவுரைகளை மீறி, அந்த சாலை வழியாக வாகனங்கள் சென்று வருவதால் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த இரட்டணையில் ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி சென்ற தண்ணீர், திடீரென குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் அலறிடியடித்து கொண்டு, தங்கள் கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு, குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினர். ஆற்றில் உள்ள அணையின் ஷட்டரை திறந்திருந்தால் தங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என குற்றம் சாட்டியுள்ள அவர்கள், தற்போது திருமண மண்டபத்தில் தங்கியிருக்கும் தங்களை ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, ஆற்காடு குப்பத்தில் உள்ள கோயில்கள், பெட்ரோல் பங்க், ஆசிரமங்கள் வெள்ள நீரில் தத்தளிக்கின்றன. தண்ணீரை வெளியேற்ற முடியாமல், பெட்ரோல் பங்க் உரிமையாளர் திணறி வருகிறார். இதனிடையே, தொடர் வெள்ளப்பெருக்கால் வீட்டின் ஒரு புறம் மட்டும் பூமியில் இறங்கியது. வீடு முழுவதும் தண்ணீர் சூழ்ந்து காணப்படுவதால், எந்த நேரத்திலும் அந்த வீடு தண்ணீரில் அடித்து செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வீட்டில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பெய்த தொடர் கனமழை காரணமாக, கெடிலம் ஆற்றில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் உடையானந்தல்,கோணக்கொல்லை, மணலூர் ஆகிய கிராமங்களுக்குள் ஆற்று வெள்ளம் புகுந்தது. இதனால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள், மேடான பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர். தங்களை இதுவரை அரசு அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும், பசியும் பட்டினியுமாக இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ள அவர்கள், வரும் காலங்களில் ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகாமல் இருக்க தடுப்புச் சுவர் அமைத்து தர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே கல்லாறு தரைப்பாலத்திற்கு மேலே வெள்ளம் பாய்ந்து ஓடுவதால், கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், மேல்களத்தூர், அனவர்திகான்பேட்டை, மின்னல் நரசிங்கபுரம், மேலேரி, குன்னத்தூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தரைப்பாலம் வழியாக யாரும் செல்லாத வகையில், தரைப்பாலத்தின் இருபுறமும் வருவாய் துறையினரும், போலீசாரும் கண்காணித்து வருகின்றனர்.