எனது சொந்த மகளுக்கு ஏற்பட்டது போல மனநிலையில் இருக்கிறேன்.. கோவை மாணவியின் பெற்றோரை சந்தித்த அமைச்சர் உருக்கம்

பாலியல் தொல்லை காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

எனது சொந்த மகளுக்கு ஏற்பட்டது போல மனநிலையில் இருக்கிறேன்.. கோவை மாணவியின் பெற்றோரை சந்தித்த அமைச்சர் உருக்கம்

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவி ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக வாக்குமூலம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சின்மயா வித்யாலயா பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த கோவை மேற்கு மகளிர் காவல் நிலைய போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர். 

மாணவியின் தற் கொலைக்கு நீதிகேட்டு அவரது பெற்றோர்   உடலை வாங்க மறுத்துடன், தங்களது மகளின் தற்கொலைக்கு நீதிகேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் உயிரிழந்த மாணவியின் வீட்டுக்கு நேரில் சென்ற அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் மாணவியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர்.  

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  தனது சொந்த மகளுக்கு இந்த நிலை ஏற்பட்டால் எப்படி இருப்பினும் அதே நிலையில் இருப்பதாக உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். 

பெற்றோர் கோரிக்கை பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எனவும், இந்த விவகாரத்தில் அனைவருக்கும் விழிப்புணர்வை தேவை எனவும் தெரிவித்த அவர், அனைத்து ஆசிரியர்களுக்கும் போக்சோ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.  

மாணவியின் உயிர் இழப்புக்கு காரணமானவர்கள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் இருபத்தி நான்கு மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், மாணவியின் வாக்குமூல கடிதம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.