ஆளுநர் குறித்த மனு...விரைவில் சந்திப்பதாக திமுகவின் துணை பொதுச்செயலாளர் தகவல்!

ஆளுநர் குறித்த மனு...விரைவில் சந்திப்பதாக திமுகவின் துணை பொதுச்செயலாளர் தகவல்!

பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளும் கட்சிகளுக்கு எதிராக வேண்டுமென்றே ஆளுநர்கள் மரபுகளை மீறி பேசி வருவதாக கனிமொழி குற்றம் சாட்டினார்.

முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல்: 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், ஆளும் திமுக தரப்புக்கும் இடையே மோதல் போக்கு என்பது நீண்ட காலமாகவே நிகழ்ந்து வருகிறது. இந்த மோதல் போக்கானது, நீட் தேர்வு விவகாரத்தில் அதிகரித்து காணப்பட்டது. அதைத்தொடர்ந்து, பல விஷயங்களில் இவர்களிடையே உரசல்கள் நிகழ்ந்து வந்தது. 

ஆளுநரை திரும்பப்பெற கோரிக்கை:

இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு டெல்லியில் பகிரங்கமாக பேட்டியளித்தார். அதேபோல், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகவும், அரசு நிகழ்வுகள், பல்கலைக்கழக நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் ஆளுநர் ஆர். எஸ். எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை பரப்பி வருவதாகவும் தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டி வந்தனர்.

இதையும் படிக்க: 3 மாவட்டங்களில் ஆர். எஸ். எஸ்.பேரணி...வன்முறை வெடிக்குமா? பதற்றத்தில் போலீசார்...!

கடிதத்தில் கையெழுத்திட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்:

இதனிடையே, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுத திமுக முடிவு செய்தது. அதன்படி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட உள்ள அறிக்கையில் கையொப்பமிடுமாறு டி.ஆர்,பாலு அழைப்பு விடுத்ததையடுத்து, திமுக மற்றும் திமுகவின் தோழமைக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதத்தில் கையெழுத்திட்டனர். அந்த கடிதம் குடியரசுத் தலைவருக்கு விரைவில் அனுப்பப்படவுள்ளது.

அன்பின் பாதை அறகட்டளையின் விழா:

இந்நிலையில்,  சென்னை அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் அன்பின் பாதை அறகட்டளையின் சார்பில் நடைபெற்ற பரிசு வழங்கும்   விழாவில் திமுக துணை பொது செயலாளார் கனிமொழி கலந்துகொண்டு பரிசுகள் வழங்கினார்.

மனு விரைவில் அனுப்பப்படும்:

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளும் கட்சிகளுக்கு எதிராக வேண்டுமென்றே ஆளுநர்கள் மரபுகளை மீறி பேசி வருவதாக கனிமொழி குற்றம் சாட்டினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை மதிக்காத வகையில் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள், மாநில உரிமைகளை மீறக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக ஆளுநரை திரும்பப் பெறுவதற்கான திமுக கூட்டணியின் மனு விரைவில் குடியரசுத்தலைவருக்கு அனுப்பப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.