மகாதீபக் கொப்பரையில் இவ்வளவு சிறப்புகளா? எத்தனை நாள் எரியும் திருவண்ணாமலை தீபம்?

திருவண்ணாமலை மகாதீபம் இன்று மாலை 6 மணியளவில் ஏற்றப்பட உள்ளது. நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார் அரசாளும் திருவண்ணாமலையில் மகாதீபக் கொப்பரைக்கான சிறப்புகள் என்ன? என்பதை பார்க்கலாம்.

ஐம்பெரும் ஆற்றல்களில் தீயின் உறைவிடமாக விளங்குகிறது திருவண்ணாமலை. ஒளிப்பிழம்பாய் ஒளிரும் இங்கு கார்த்திகை தீபத் திருநாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 

பத்து நாட்கள் நடக்கும் விழாவின் இறுதிநாளான இன்று மாலை 6 மணியளவில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த மகாதீபமானது சுமார் 10 நாட்களுக்கு மேல் எரியக் கூடியது.. இதன் வரலாறே மிகவும் சுவாரஸ்யம் மிகுந்ததாகும். 

1991-ம் ஆண்டு இரும்பினால் தயார் செய்யப்பட்ட கொப்பரையானது கடந்த 2021-ம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்டது. இந்த கொப்பரை பழுதானதைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு புதிய கொப்பரை தயார் செய்யப்பட்டது. 

தாமிரம் மற்றும் இரும்பு கலந்து தயாரிக்கப்பட்ட இந்த கொப்பரை 150 கிலோ எடை, 5 அடி உயரமும், 40 அங்குல விட்டமும் கொண்டதாகும். தரையில் இருந்து 2,668 அடி உயரம் கொண்ட மலைஉச்சிக்கு பக்தர்களால் தூக்கி செல்லப்படும் இந்த கொப்பரை. 

இதையும் படிக்க : "புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கவில்லை" - சுபாஷ் சார்கர்

மேலே கொண்டு செல்ல வசதியாக கொப்பரையின் மேல்பாகத்தில் நான்கு வளையம், கீழ்பாகம் 4 வளையங்கள் பொருத்தப்பட்டன. இதில் காவி நிற வண்ணம் பூசப்பட்டு அதில் அர்த்தநாரீஸ்வரரின் படம் வரையப்பட்டு கீழே சிவ சிவ என வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும். 

தீப விளக்கில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் உருவாய் எழுவது போல வரையப்பட்ட இந்த கொப்பரைக்குள் 3500 கிலோ நெய், 1000 மீட்டர் காடா துணி பயன்படுத்தப்படுகிறது. இதற்கு பக்தர்கள் நெய் காணிக்கை செய்வதற்காகவே சிறப்பு கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. 

இதில் பக்தர்கள் 80 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையிலான நெய் வாங்கி அதனை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தலாம். இவ்வாறு நெய், காடாதுணி, கொப்பரை போன்றவை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு மாலை 5 மணிக்கு தயார்படுத்தப்படும். 

கார்த்திகை தீபத்திருவிழாவான இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றிய நிலையில், மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படும். மலையில் ஏற்றப்படும் இந்த மகாதீபத்தை சுற்று வட்டாரத்தில் 20 கி.மீ. தூரம் வரையிலும் மக்கள் காண முடியும். 

ஜோதியில் அண்ணாமலையார் காட்சியளிப்பதாய் எண்ணும் பக்தர்கள் அரோகர என்ற முழக்கத்துடன் மனமுருக வேண்டுவர்.