31 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...!

தமிழகத்தில் சுமார் 31 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 11 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதற்காக சென்னை வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

31 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...!

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவுற்றப் பணிகளை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அங்கிருந்து, ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளத்துக்கு வந்த பிரதமர் மோடியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி,  சிலப்பதிகாரம் ஆங்கில பதிப்பு புத்தகத்தை வழங்கி வரவேற்றார். தொடர்ந்து, சாலை மார்க்கமாக நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு, வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, நிறைவுற்ற திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்கள் என சுமார் 31 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 11 திட்டங்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜானா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஆயிரத்து 152 வீடுகளை பயனாளிகளிடம் பிரதமர் ஒப்படைத்தார்.  

இந்த விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்றப் பிறகு பிரதமர் மோடியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் விழாவில் ஒன்றாக பங்கேற்றது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.