திடீரென!! இடிந்து விழுந்த திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய வீடுகள்....பதற்றத்தில் தெறித்து ஓடிய மக்கள்...

சென்னை திருவொற்றியூரில் உள்ள அரிவாக்குளம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு திடீரென இடிந்து விழுந்ததில், 24 வீடுகள் தரைமட்டமாகி உள்ளது.

திடீரென!! இடிந்து விழுந்த திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய வீடுகள்....பதற்றத்தில் தெறித்து ஓடிய மக்கள்...

திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் உள்ள கிராமத் தெருவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டப்பட்டது. இந்த 4 மாடி  கட்டடத்தில் நேற்று இரவு லேசான விரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து காலையில் விரிசல் அதிகமானதால் மக்கள் முன்னெச்சரிக்கையாக வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதனைத்தொடர்ந்து காலை 10.20 மணியளவில் திடீரென கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதனை கண்ட மக்கள் பதறி அடித்தும், சிலர் வீடுகளை இழந்ததால் கதறியும் அழுதனர்.

இந்நிலையில், வீடுகளை விட்டு மக்கள் முன்கூட்டியே வெளியேறியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், இடத்தை ஆய்வு செய்து இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா என தேடி வருகின்றனர். இந்தநிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இதனிடையே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் மற்றும் மாற்று வீடுகள் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அறிந்து துயரமுற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.