கலாக்ஷேத்ரா வழக்கில்..... திடீர் திருப்பம்....!

கலாக்ஷேத்ரா  வழக்கில்..... திடீர் திருப்பம்....!

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மணி அருண்டேல் கல்லூரியில் படித்தபோது பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக முன்னாள் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அடையாறு அனைத்து மகளிர் போலீசார், கல்லூரியின் நடன துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மனை  ஏப்ரல் 3ம் தேதி கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஹரி பத்மன் தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்த போது, வளர்ச்சியை பிடிக்காத சக ஆசிரியர்கள், மாணவிகளைத் தூண்டி விட்டு ஹரி பத்மனுக்கு எதிராக பொய் புகார் அளித்துள்ளதாகவும், 2019ம் ஆண்டு  சம்பவம் நடந்ததாக கூறி, 4 ஆண்டுகளுக்கு பின் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஹரிபத்மன் தரப்பில் வாதிடப்பட்டது. 

இந்நிலையில், காவல் துறை தரப்பில், இந்த வழக்கு தொடர்பாக, 162 மாணவிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள், ஹரிபத்மன் மீது குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்ய வேண்டியுள்ளதால், ஜாமீன் வழங்க கூடாது எனவும் ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கும் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு மகளிர் ஆணையம் தரப்பில், 103 மாணவிகளிடம் விசாரித்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், விசாரணை குழுவை மாற்றியமைக்க கோரி ஏழு மாணவிகள் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம், ஜூன் 15ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி இளந்திரையன், ஹரிபத்மனின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூன் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதேசமயம், இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்ற ஹரிபத்மன் தரப்பு கோரிக்கையையும் நீதிபதி நிராகரித்து விட்டார்.

 இதையும் படிக்க     }  "மலை கிராமங்களில் சுகாதார உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்..." - மா. சுப்பிரமணியம்.

இந்நிலையில், பட்டியலில் உள்ள வழக்குகள் விசாரணை முடிந்த பின், ஹரிபத்மன் தரப்பில் நீதிபதி இளந்திரையன் முன்பு முறையிடப்பட்டது. அப்போது, ஏற்கனவே 30 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதால்தான் அவசரமாக ஜாமின் கோரி மனு தாக்கல்  செய்ததாகவும், ஆனால் வழக்கு ஜூன் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டதால் ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி ஜாமீன் மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிக்க     }  "சூடானில் மீதமுள்ள தமிழர்களை ......!" - அமைச்சர் செஞ்சி மஸ்தான்.