ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை...!! 

 ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை...!! 

பிரபல கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிறுவனம் நிலங்களை வாங்கி விற்பனை செய்வது, குடியிருப்புகளை கட்டித் தருவதாக ஒப்பந்தம் செய்து விற்பனை செய்வது போனறவற்றை செய்து வந்தது. குறிப்பாக குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கி அதிகப்படியான விலைக்கு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. 

சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த  இந்நிறுவனத்தின் கிளைகள் திருச்சி, பெங்களூர், ஹைதராபாத், உள்ளிட்ட பல்வேறு  நகரங்களில் அமைக்கப்பட்டுள்ளன. 

குறிப்பாக திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து கட்டுமான பணிகளையும் ஜீ ஸ்கொயர் நிறுவனம் மேற்கொண்டதாகவும், கொரோனா காலகட்டத்தில் அதிகப்படியான பண பரிவர்த்தனையை இவர்கள் மேற்கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.  

இதன் அடிப்படையில் இந்த வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் தலைமை இடமாக உள்ள சேத்துப்பட்டு மற்றும் ஆழ்வார்பேட்டையில், உள்ள கார்ப்பரேட் அலுவலங்களிலும் அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் இல்லம், திருமங்கலத்தில் உள்ள  ஆடிட்டர் சண்முக மூர்த்தி இல்லம், கொடுங்கையூர் மற்றும் மணலியில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவன நிர்வாகிகள் வீடு மற்றும் அலுவலகங்கள் என 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

குறிப்பாக வருமான வரி துறை சோதனை நடத்தும் பொழுது அந்த பகுதியில் இருக்கக்கூடிய காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஆனால் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியில் இருக்க கூடிய பிரபலங்கள் இதில் இருப்பதால் மத்திய அளவிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.