பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு... 

காரையார் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றத்தால் அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு - பாபநாசம் கோவில் படித்துறை மூழ்கியது

பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு... 

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மேற்குதொடர்ச்சி மலையில் உச்சநீர்மட்டம் 143 அடி கொண்ட பாபநாசம் காரையார் அணை மற்றும் சேர்வலாறு அணை உள்ளது. கடந்த சில நாட்களாக அணைகள் நிரம்பும் தருவாயில் காணப்படுகிறது. இந்த நிலையில் அணைக்கு நேற்று மாலை முதல் தற்போது வரை நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி இரு அணைகளில் இருந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி சுமார் 6,800 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு 6,400 கன அடி நீர்வரத்து காணப்படுகிறது. மேலும் இரு அணைகளுக்கும் நேற்று இரவு அதிகபட்சமாக சுமார் 30 ஆயிரம் கன அடி வரை நீர்வரத்து, காணப்பட்டு சுமார் 20 ஆயிரம் கன அடிவரை நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதன்காரணமாக மேற்குதொடர்ச்சி மலைஅடிவாரத்தில் உள்ள ஆண்டு முழுவதும் வற்றாத அருவியான அகஸ்தியர் அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பாபநாசம் கோவில் படித்துறை, கரையோரம் உள்ள பிள்ளையார் கோவில், மண்டபம் ஆகியவற்றில் வெள்ளநீர் புகுந்து ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையொட்டி தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, அருகில் செல்லவோ மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதை வி.கே.புரம் நகராட்சியினர் ஒலிப்பெருக்கி மூலமாக தெரிவித்து, பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளப்பெருக்கு காரணமாக காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடையும் விதித்துள்ளனர்.