வாகன ஓட்டிகளிடையே தலைக்கவசம் அணியும் பழக்கம் அதிகரிப்பு...!

வாகன ஓட்டிகளிடையே தலைக்கவசம் அணியும் பழக்கம் அதிகரிப்பு...!

இரு சக்கர வாகன ஓட்டிகளிடையே தலைக்கவசம் அணியும் பழக்கம் 80 சதவீதம் உயர்ந்துள்ளதாக சென்னை மேற்கு போக்குவரத்து காவல் ஆணையர் சமய் சிங் மீனா கூறியுள்ளார். 


சென்னை புதுக் கல்லூரி கணினி அறிவியல் முதுகலை  மாணவர்கள் மற்றும் புது கல்லூரியின் சமூக சேவை அமைப்பின்  சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணியை சென்னை மேற்கு போக்குவரத்து காவல் ஆணையர் சமய் சிங் மீனா தொடங்கி வைத்தார்.  

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற நோக்கத்தோடு, இன்று 100 மாணவர்கள் பங்கேற்கும் இந்த பேரணியை  நடத்துவதாக கூறிய அவர், தற்போது இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வரும் நிலையில், குறிப்பாக இளைய தலைமுறையினர் அதிகளவில் தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வருகின்றனர், ஆகையால் எங்கள் பகுதியில் உள்ள கல்லூரிகளில் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்து வருவதாக கூறினார்.

இதையும் படிக்க : 2024ல் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவோம் - விஜய் வசந்த எம்.பி பேட்டி!

தொடர்ந்து பேசிய அவர், தற்போது சென்னை போக்குவரத்து காவல்துறை ஆங்காங்கே பல இடங்களில் போக்குவரத்துக் காவல் அதிகாரிகளின் தலைமையில் சோதனைகளில் ஈடுபடுகின்றனர். அப்போது பின்னால் அமர்ந்து வருபவர்கள் தலைகவசம் அணியாமல் இருந்தால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும், இதனால் 70 முதல் 80% வரை வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டி வருகின்றனர் என்றும், இது 90% வரை அதிகரிக்க இன்னும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.