இந்தி திணிப்பு; "சோவியத் யூனியன் நிலைதான் இந்தியாவிற்கும்" வைகோ எச்சரிக்கை!

இந்தி திணிப்பு; "சோவியத் யூனியன் நிலைதான் இந்தியாவிற்கும்" வைகோ எச்சரிக்கை!

நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்கும் முயற்சியை கைவிடா விடட்டால் சோவியத் யூனியன் நிலைமைதான்  இந்தியாவிற்கும் ஏற்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  எச்சரித்துள்ளார்

இந்தியாவின் முப்பெரும் குற்றவியல் சட்டங்களான இந்தியத் தண்டனை சட்டம், இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியியல் சட்டம் ஆகியவற்றின் பெயர்களை இந்தியில் மாற்றியமைத்தும் சில சட்டப்பிரிவுகளை திருத்தியும் புதிய சட்ட மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நேற்று  நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இறுதி நாளான நேற்று குற்றவியல் சட்டதங்களின் பெயர்களை மாற்றியமைக்கும் சட்டத்திருத்தத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இம்மசோதா நேற்று இரு அவைகளிலும் நிறைவேறியது. இம்மசோதாவின் படி இந்தியத் தண்டனை சட்டத்தை பாரத் நியாய சன்ஹிதா எனவும், இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை பாரத் நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா எனவும், இந்தியச் சாட்சிகள் சட்டத்தை பாரத் சாக்‌ஷ்யா எனவும் பெயர் மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சட்டத் திருத்த மசோதாவிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுத் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  "இந்தியா என்ற பெயரையே மாற்றத் துடிக்கும் இந்துந்துவ சனாதனக் கூட்டம், இதற்கு முன்னோட்டமாக சட்டங்களில் உள்ள ‘இந்திய’ என்ற பெயரை ‘பாரதீய’ என்று மாற்ற முனைந்துள்ளது. ஆர். எஸ். எஸ்.பின்னணியில் இயங்கி வரும் மோடி அரசு, செத்துப் போன சமஸ்கிருத மொழிக்கும், இந்தி மொழிக்கும் செல்வாக்குத் தேட முயற்சிப்பதும், நகரங்கள், ஊர்கள் பெயர்களை மாற்றி வருவதும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. அதன் உச்சமாக சட்டங்களின் பெயரையும், ஏன் நாட்டின் பெயரையும் மாற்றிட துணிந்து விட்டது. ஒன்றிய பாஜக அரசின் இந்நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு உரியது" என தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தயுள்ள அவர், இல்லையேல் சோவியத் யூனியன் நிலைமைதான்  இந்தியாவிற்கும் ஏற்படும் என எச்சரித்துள்ளார். 
 
இதையும் படிக்க:மகளிர் உரிமை தொகை திட்டம்; முதல்வர் இன்று ஆலோசனை!