மழைநீர் சேகரிப்புக்காக தோண்டப்பட்ட குழியில் சிக்கிய நபரை மீட்கும் பணி தீவிரம்

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் மழை நீர் சேகரிப்புக்காக தோண்டிய 15 அடி ஆழ குழியில் சிக்கியுள்ள நபரை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினரும், காவல்துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மழைநீர் சேகரிப்புக்காக தோண்டப்பட்ட குழியில் சிக்கிய நபரை மீட்கும் பணி தீவிரம்

சென்னை தண்டையார்பேட்டை தாண்டவராயன் முதல் தெரு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கண் மருத்துவமனையின் குடிநீர் தேவைக்காக கட்டிடத்தின் பின்புறம் மழைநீர் சேகரிப்புத் தொட்டி 15 அடி ஆழத்தில் தோண்டப்பட்டு வருகிறது. அந்த பணிக்காக இன்று மதியம் 2 மணியளவில் வந்த ஆகாஷ், வீரப்பன் மற்றும் சின்னதுரை ஆகிய 3 பணியாளர்கள் குழிக்கு அருகில் பணியாற்றி வந்துள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக குழிக்கு ஓரமாக இருந்த மண் சரிந்து விழுந்ததில் 3 பேரும் 15 அடி ஆழக்குழிக்குள் விழுந்துள்ளனர்.  இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அளித்த தகவலின் பேரில் வண்ணாரப்பேட்டை மற்றும் தண்டையார்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த 2 தீயணைப்பு வாகனங்களில் 10 க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

தீயணைப்புத் துறையினர் மேற்கொண்ட துரித நடவடிக்கையால் இதுவரை ஆகாஷ் மற்றும் வீரப்பன் ஆகிய இருவரும் கயிறு கட்டி குழிக்குள் இறங்கி மேலே கொண்டு வரப்பட்டுள்ளனர். மேலும், மண் மூடி 15 அடி ஆழக் குழிக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் சின்னதுரை என்ற ஒரு நபரை மீட்கும் பணியில் கடந்த 2 மணி நேரமாக தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை மீட்கப்பட்டுள்ள இருவருக்கும் லேசான மூச்சுத் திணரல் இருந்ததால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

15 அடி குழிக்குள் அமர்ந்து பணியாற்றியதால் குழியின் ஆழத்தில் மண் மூடிய நிலையில் சிக்கியுள்ள சின்னதுரை என்ற நபரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குழியின் ஆழத்தில் அவர் சிக்கியுள்ளதால் மேல் பரப்பிலுள்ள மண்ணை தோண்டி, அவரை உயிருடன் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒரு ஆம்புலன்ஸ் உடன் மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் இருந்து வருகின்றனர். குழிக்குள் மாட்டிக்கொண்டிருக்கும் நபரை மீட்டு வெளியில் எடுத்த பின்பு உடனடி சிகிச்சை தேவைப்படும் என்பதால் தேவையான மருத்துவ உபகரணங்களுடன் முதலுதவி அளிக்கும் பொருட்டு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.