பேனா வைக்க அனுமதி மீன் விற்க அனுமதி இல்லையா? ஜெயக்குமார் கேள்வி...!!

பேனா வைக்க அனுமதி மீன் விற்க அனுமதி இல்லையா? ஜெயக்குமார் கேள்வி...!!

கடலில் பேனா வைப்பதற்கு அனுமதி இருக்கிறது பாரம்பரியமாக மீன் விற்பனை செய்யும் மீனவர்களுக்கு அங்கு அனுமதி இல்லையா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை ஓட்டேரியில் உள்ள பிரிக்ளின் சாலையில்  அதிமுக சார்பாக தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு பழங்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், "கடலில் பேனா வைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் நிச்சயமாக பாதிப்படையும். மேலும் இது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, உலகப் புகழ்பெற்ற மெரினா கடற்கரை பேனா வைத்த பிறகு பேனா கடற்கரையாக மாறிவிடும். இதைக் கருத்தில் கொள்ளாமல் மத்திய அரசு சுற்றுச்சூழல் அமைச்சகம் இதற்கான அனுமதி கொடுத்தது தவறு எனக் கூறினார்.

மேலும், கடலில் பேனா வைப்பதற்கு அனுமதி இருக்கிறது பாரம்பரியமாக மீன் விற்பனை செய்யும் மீனவர்களுக்கு அங்கு அனுமதி இல்லையா என கேள்வி எழுப்பியதோடு, கடலில் பேனா வைப்பது குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் இல்லை என்றால் அதிமுக இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் என கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் மணல் கொள்ளை சாம்ராஜ்யம் நடந்து கொண்டிருக்கிறது எனவும் கொலைகள் கொள்ளை கட்டப்பஞ்சாயத்து மணல் கடத்தல்  இதெல்லாம் சாதாரண நிகழ்வாக தமிழகத்தில் இருந்து வருகிறது எனவும் இந்த ஆட்சியில் நீதிமன்றம் வரை செல்லுபவர்களுக்கே பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது எனவும் காவல்துறையினருக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை எனவும் கூறினார்.  

மேலும், இளைஞர்களை சீரழிக்கும் விஷயங்களில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வருவதாகவும். ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் 'மதுவை ஒழிப்போம்' என கூறியவர்கள் இப்போது 'மதுவை பெருக்குவோம்' என்பது போல் செய்து வருவதாக கூறினார்.

இதையும் படிக்க:பதவி இழக்கும் அமைச்சர்கள்...! யார்? யார்?