பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமா? இல்லையா?அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சால் தொடரும் குழப்பம்!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சால் பொதுத்தேர்வு  எழுதும் மாணவ மாணவிகள் முகக்கவசம் அணிவது கட்டாயமா ? இல்லையா? என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமா? இல்லையா?அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சால் தொடரும் குழப்பம்!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. பத்தாம் வகுப்புக்கு நாளை மறுதினமும், 11ம் வகுப்புக்கு வரும் 10ம் தேதியும் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கான ஏற்பாடுகளை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வுத்துறை செய்து வருகிறது. 

இதனால், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு அறையில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு கூறியதாக செய்தி பரவியது. 

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழியிடம், முகக்கவசம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், தேர்வு எழுதும் பொழுது முகக்கவசம் கட்டாயம் கிடையாது என்றும் மாணவர்கள் தங்களது பாதுகாப்பிற்காக அணியலாம் என்றும் தெரிவித்தார்.

அண்மையில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என  தமிழக சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. அதற்கு நேர் எதிராக முகக்கவசம் கட்டாயமில்லை என அமைச்சர் பேசியிருப்பதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.