முதலமைச்சர் கடிதம் எழுதுவது அவரது உரிமை...! தமிழிசை பேச்சு...!!

முதலமைச்சர் கடிதம் எழுதுவது அவரது உரிமை...! தமிழிசை பேச்சு...!!

மசோதாவிற்கு ஒப்புதல் தர காலக்கெடு நிர்ணையிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதுவது அவரது உரிமை என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி கோரிமேடு மதர் தெரசா பட்ட மேற்படிப்பு மற்றும் சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒய்-20 நிகழ்ச்சி நடைபெற்றது. துணை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு நிகழ்வை தொடங்கி வைத்தார். சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், மதர் தெரசாநிறுவன டீன் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

நிகழ்ச்சிக்கு பின் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம்,  மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் வழங்க வேண்டி மாநில ஆளுநர்களுக்கு மத்திய அரசு வழங்க வலியுறுத்தி பிற மாநில சட்டப்பேரவைகளிலும்  தீர்மானம் நிறைவேற்றிடக் கோரி பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் "மசோதாவிற்கு ஒப்புதல் தர காலக்கெடு நிர்ணையிக்க வேண்டும் என முதலமைச்சர் கடிதம் எழுதுவது அவரது உரிமை. என்னைப் பொருத்தவரை சட்ட மசோதா ஒப்புதலுக்காக என்னிடம் வந்தால், மசோதாவை பற்றி கலந்தாலோசிக்க  எவ்வளவு கால அவகாசம் தேவையோ அவ்வளவு எடுத்துக்கொள்வேன்" எனத் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க சட்ட நுணுக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் கூறினார். மேலும் நீதிமன்றங்களில் உடனடியாக தீர்ப்பு சொல்வது தவறான முன் உதாரணமாக ஆகிவிடக்கூடும் என்பதை சுட்டிக்காட்டிய அவர் தன்னிடம் ஒப்புதளுக்கு வரும் மசோதாக்களை  பொதுமக்களிடமிருந்தும் எதிர்கட்சிகளிடமிருந்தும் வரும் கோரிக்கைகளை கொண்டு அலசி ஆராய்ந்து, முடிவெடுப்பதாக கூறினார்.

மேலும், தற்போதுதான் முதலமைச்சர் கடிதம் எழுதுகின்றார் எனவும் இதற்கு முன்பாக எதிர்கட்சியாக இருக்கும்போது அவர்கள் ஆளுநர்களை பற்றி கருத்து சொல்லவில்லை எனக் குற்றம் சாட்டினார்.