அதிமுக இருக்கும் வரை பொதுசெயலாளர் ஜெயலலிதா தான்...ஓபிஎஸ் உறுதி!

அதிமுக இருக்கும் வரை பொதுசெயலாளர் ஜெயலலிதா தான்...ஓபிஎஸ் உறுதி!

எம்ஜிஆர் போல கண்ணாடியும் , குல்லாவும் அணிந்து எடப்பாடி பழனிசாமி எடுத்துக் கொண்ட புகைப்படத்தால் அதிமுக தொண்டர்கள் மன வருத்தத்தில் இருப்பதாக ஓபிஎஸ் கூறியுள்ளார்.

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஏப்ரல் 24ம் தேதி திருச்சியில் தங்களது அணி சார்பில் மாநாடு நடத்த உள்ளதாகவும் , எம்ஜிஆர் , ஜெயலலிதா பிறந்தநாள் மற்றும் அதிமுக பொன்விழாவை குறிப்பிடும் வகையில் அந்த மாநாட்டை முப்பெரும் விழாவாக நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் மாநாட்டை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தனது ஆதரவாளர்களை சந்திக்க உள்ளதாகவும் ஓபிஎஸ் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் ஆணையத்தில் இன்று வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தான் இருப்பதாகவும், வாய்ப்பு கிடைத்தால் நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடியை நேரில் சந்திப்பேன் என்றும் கூறினார். 

இதையும் படிக்க : குரூப் 4 தேர்வில் முறைகேடா? தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கம்!

அதிமுகவில் பிளவு ஏற்பட்ட போது மக்கள் தான் சரியான தீர்ப்பை கொடுத்ததாகவும், கட்சியின் பெயர், சின்னம் யாரிடம் இருக்கிறது என்பதைக் காட்டிலும் தொண்டர்களும், மக்களும் சேர்ந்து எடுக்கும் முடிவுதான் நிலையானதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும், எம்ஜிஆர் போல கண்ணாடியும் , குல்லாவும் அணிந்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி எடுத்துக் கொண்ட புகைப்படத்தால் அதிமுக தொண்டர்கள் மன வருத்தத்தில் இருப்பதாக தெரிவித்தவர், 
பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் என நாங்கள் நீதிமன்றத்தில் கூறவில்லை எனவும், உச்சபட்ச பதவிக்கு தேர்தல் வைத்தால் போட்டியிட தயார் என்று கூறியதாக தெரிவித்தார். அத்துடன், அதிமுக இருக்கும்வரை ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச்செயலாளர் என்றும் ஓபிஎஸ் உறுதி பட தெரிவித்தார்.