இந்த ஆட்சியில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் மாணவிகள் புகார் கொடுக்கிறார்கள்.! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேச்சு.! 

இந்த ஆட்சியில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் மாணவிகள் புகார் கொடுக்கிறார்கள்.! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேச்சு.! 

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஆகிய ஒன்றியப்பகுதிகளில் உள்ள ரேசன்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 14 மளிகை பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியில்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் "தற்போது 3 பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் உள்ளிட்டவர்கள் மீது பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பில் இருந்து வந்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு குழு அமைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றது. இதே போல் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கும் வகையில் ஹெல்ப் லைன் மற்றும் இ-மெயில் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பெறப்படுகின்ற புகாரின் மீதும் விசாரணை நடைபெற்று வருகின்றது" எனக் கூறினார். 

மேலும் "இதே போல் புகாரில் உண்மைத்தன்மையுள்ளதா என்பதை கண்டறிய அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். பள்ளிக்கல்வித்துறை துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளும் நிலையில் காவல்துறை மூலம் தமிழக முதல்வரும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்வார்கள்" எனத் தெரிவித்தார்.
 
இதன்பின்னர்  இத்தனை ஆண்டு காலம் புகார் அளிக்காமல் இப்போது தொடர்ந்து இத்தனை புகார்கள் வருவதற்கான காரணம் என்ன என்று கேட்ட செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் 
"இந்த ஆட்சியில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாக கூட இருக்கலாம். மக்களின் நம்பிக்கைகுரிய அரசாக இந்த அரசு இருக்கும் என்பதுடன் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் அரசாக இந்த அரசு இருக்கும்" எனத் தெரிவித்தார்.