"சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது"  அமைச்சர் கே.என்.நேரு உறுதி!!

குடிநீர் ஏரிகளில் போதுமான நீர் இருப்பதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் இயங்கி வருகிறது. நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் இந்த நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, கைத்தறித்துறை அமைச்சர் காந்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். 

அதைத் தொடர்ந்து கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து தினந்தோறும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிறுவனத்தில் ஒப்பந்த நிறுவனம் மாறியதால் பராமரிப்பு பணிகளில் தொய்வு காரணமாக தற்போது நாளொன்றுக்கு 50 மில்லியன் லிட்டர் மட்டுமே உற்பத்தி நடைபெறுவதால், அதனை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்தார். 

மேலும், குடிநீர் ஏரிகளில் போதுமான நீர் இருப்பு உள்ளதாகவும், 13 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஏரிகளில் தற்போது 9 டிஎம்சி இருப்பு இருப்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்றார். தற்போது சென்னையில் நாளொன்றுக்கு 1000 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வரப்படுவதாகவும், அடுத்த 20 நாட்களில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் பயன்பாட்டிற்கு வர இருப்பதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் திட்ட மதிப்பீடு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆய்விற்கு பிறகு செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் நேரு தெரிவித்தார்.