"மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து கொடுக்க" கே.என்.நேரு வேண்டுகோள்...!!

"மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து கொடுக்க" கே.என்.நேரு வேண்டுகோள்...!!

பொதுமக்கள் மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து கொடுத்தால் அரசாங்கத்தின் பணி சுலபமாவதோடு நாடும் சுத்தமாக இருக்கும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திடக்கழிவு மேலாண்மை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு குறும்படங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார்.

நகரங்களை தூய்மையாக்குவதற்கும், குப்பையில்லா தூய்மையான மக்கள் இயக்கத்தின் கீழ் 4 வகையான தலைப்புகளில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த விழிப்புணர்வு இயக்கத்தை மேலும் மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையால் 4 வகையான குறும்படங்களை  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் இருக்கும் நகரங்களை சுத்தமாக வைத்துக் கொள்வதற்காக சில விளம்பர படங்கள் குறும்படங்களாக தயாரிக்கப்பட்டு துறை சார்பாக வெளியிட்டுள்ளதாகவும்,பல இடங்களில் சினிமா திரையரங்குகளிலும், நகரின் முக்கியமான இடங்களில் தனியார் பங்களிப்புடன் எல்.இ.டி திரை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார். மக்கள் மத்தியில் குப்பைகள் தேங்காமல் வைத்துக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறிய அவர், மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து கொடுத்தால் நகராட்சி துறையின் பாதி பங்கு நிறைவடைந்து விடும் எனவும் தெரிவித்தார்.

மக்கள் மக்கும் குப்பை மக்காத குப்பை என சேர்த்து போட்டுவதால், நாள் ஒன்றுக்கு 5000 டன் குப்பை சேர்வதாகவும், இதற்கென இயந்திரங்களை பயன்படுத்தி பிரித்தெடுப்பதால் அரசுக்கு அதிக செலவு ஏற்படுகிறது என்றும், மக்களே பிரித்து கொடுத்து விட்டால் அரசாங்கத்தின் பணி சுலபமாவதோடு நாடும் சுத்தமாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.

இதையும் படிக்க:5-வது நாளாக தொடரும் TET ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம்..!!