"ஆளுநர் மாளிகை என்ன சந்தைக்கடையா?" கே.பி.ராமலிங்கம் கேள்வி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகையை சந்தைக்கடையாக நினைக்கிறார் என்று பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் குற்றச்சாட்டியுள்ளார். 

கரூரில் நவம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் நடைபெறும் "என் மண், என் மக்கள்" நடைபயணத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்க உள்ளார். இது தொடர்பாக கரூர் மாவட்ட பாஜக சார்பில் தாந்தோணி மலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த கே.பி.ராமலிங்கம், "ஆளுநர் மாளிகையை ஸ்டாலின் ஒரு சந்தை கடையாக நினைக்கிறார். திமுக ஆட்சியில் இருக்கும் வரை தமிழகம் தீவிரவாத கூடாரமாகதான் இருக்கும்" எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், "பாரத பிரதமர் 2014 ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை 356 வது பிரிவை கொண்டு கலைக்க மாட்டோம் என்று சொன்னார். ஆனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு 
சீர்கேடு ஏற்ப்பட்டால் பிரதமர் பார்த்து கொண்டு சும்மா இருக்க மாட்டார்" என்று எச்சரித்ததோடு "தமிழகத்தில் 
ஜனநாயகம் செத்து விட்டது" என்று பேசியுள்ளார்.